சென்னையில் குடியேறிய பிறகு எம்.ஜி.ஆர்.
சினிமா
சென்னையில் குடியேறிய பிறகு எம்.ஜி.ஆர். வீட்டுக்குச் சென்று, சத்யா அம்மையார் பரிமாற உணவு சாப்பிட்டிருக்கிறார் கருணாநிதி. அதேபோல் கருணாநிதி வீட்டுக்குச் சென்று, அவர் தாயார் அஞ்சுகம் அம்மையார் படைத்த உணவை உண்டு மகிழ்ந்தவர், எம்.ஜி.ஆர்.
1963 ஜனவரியில் கருணாநிதியின் தாயார் அஞ்சுகம் அம்மையார் மறைந்தபோது எம்.ஜி.ஆர். விடுத்த இரங்கல் செய்தியில் கூறியிருந்ததாவது:-
சகோதரர் மு.க. அவர்களின் அருமை அன்னையார் அவர்களோடு, பழகவும், அவர்களுடைய ஈடுகாட்ட இயலாத அன்புள்ளத்தை உணரவும் வாய்ப்பைப் பெற்றவன் நான்.
பார்த்தவுடனே, “தம்பி வா!” என்று அழைப்பதிலேதான் எவ்வளவு பாசம். `சாப்பிடத்தான் வேண்டும்’ என்று வற்புறுத்துவதிலேதான் எவ்வளவு அழுத்தமான தாய்மை உணர்ச்சி. உட்கார்ந்து பேச ஆரம்பித்தால், வீட்டு விஷயங்களிலேயிருந்து, தொழில், அரசியல் வரையிலே அளவளாவும் அன்னையைத் தவிர வேறு யாருக்குமே இராத_ அன்புள்ளம். இவைகளையெல்லாம், என்னாலேயே மறக்க முடியவில்லையே! சகோதரர் மு.க. எப்படித்தான் மறப்பாரோ?
இன்பத்தைப் பிரிந்தால், மறுபடி இன்பத்தை அடையலாம். நட்பைப் பிரிந்தால், பிறகு நட்புக் கிடைக்கலாம். வாழ்க்கைத் துணையைப் பிரிந்தால் கூட வேறொரு வாழ்க்கை துணையை பெறலாம். மக்கட்செல்வத்தை இழந்தாலும், மறுபடி பெற்று விடலாம். ஆனால், அன்னையைm, அன்புத்தாயை, உலகத்தை வளர்க்கும் தாய்மையைப் பிரிந்து விட்டால், மறுபடி நமக்கு யார் அன்னை? நினைத்தாலே நெஞ்சம் நடுங்குகிறது.”






















