• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இந்திய விளம்பரங்களின் ஜாம்பவான் பியூஷ் பாண்டே மறைவு

சினிமா

மக்களின் அன்றாட வாழ்க்கையில் தொலைக்காட்சி முக்கிய பங்காற்றுகிறது. தொலைக்காட்சிகளில் விளம்பரங்கள் தவிர்க்க முடியாத அம்சமாக இருந்து வருகிறது. அதிலும் 90-களில் வெளிவந்த பல விளம்பரங்கள் மக்கள் மத்தியில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தின.

அந்த வகையில் ஃபெவிகால் (Fevicol) பசை விளம்பரம், காட்பரி (Cadbury) மிட்டாய் விளம்பரம், ஏசியன் பெயிண்ட்ஸ் (Asian Paints) விளம்பரம் ஆகியவற்றை நம்மால் மறந்திருக்க முடியாது.

இந்தத் தனித்துவமான விளம்பரங்களை உருவாக்கிய பியூஷ் பாண்டே (Piyush Pandey) இன்று (வெள்ளிக்கிழமை) உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 70.

தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது.

ஓகில்வி (Ogilvy) என்ற விளம்பர நிறுவனத்தில் 1982-இல் இணைந்த பியூஷ் பாண்டே, 40 ஆண்டுகளாக இந்தியாவின் விளம்பரத் துறையில் கோலோச்சி வந்தார். அந்நிறுவனத்தின் நிர்வாகத் தலைவராகவும், சர்வதேச கிரியேட்டிவ் தலைமைப் பதவியிலும் அவர் பெரும் பங்காற்றியுள்ளார்.

1982-இல் சன்லைட் டிடர்ஜென்ட் பவுடருக்காக அவர் முதன்முதலில் விளம்பரம் எழுதினார். தொடர்ந்து Fevicol, Cadbury, Asian Paints, லூனா மொபெட் (Luna Moped), ஃபார்ச்சூன் ஆயில் (Fortune Oil) உள்ளிட்ட பல பிராண்டுகளுக்கு அவர் உருவாக்கிய விளம்பர கான்செப்ட் அனைவரையும் கவர்ந்தது.

அவரது தலைமையின் கீழ் Ogilvy இந்தியாவின் நம்பர் 1 விளம்பரக் கம்பெனியாகத் திகழ்ந்தது. 2013-இல் பியூஷ் பாண்டே சினிமாவிலும் நடிகராகக் களமிறங்கினார். ஜான் ஆபிரகாம் நடிப்பில் வெளியான மெட்ராஸ் கஃபே (Madras Cafe) படத்தில் அவர் நடித்தார். மேலும் போபால் எக்ஸ்பிரஸ் (Bhopal Express) என்ற படத்திற்குத் திரைக்கதையும் அவர் எழுதியுள்ளார்.

அவரது பணிகளுக்காக, கடந்த 2016-இல் அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். தற்போது அவரின் மறைவுக்கு வணிகம், விளம்பரம் மற்றும் அரசியல் பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நாளை அவரது உடல் மும்பை சிவாஜி பார்க் பகுதியில் தகனம் செய்யப்பட உள்ளது.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ள இரங்கல் 'X' பதிவில், "பியூஷ் பாண்டேவின் மறைவை அறிந்து வருத்தமடைந்தேன். இந்திய விளம்பரத் துறையின் ஜாம்பவானாக இருந்த அவர், பேச்சுவழக்குச் சொற்கள், மண் சார்ந்த நகைச்சுவை மற்றும் உண்மையான அரவணைப்பைக் கொண்டு வந்து தகவல்தொடர்பு முறையையே மாற்றினார்.

பல்வேறு சந்தர்ப்பங்களில் அவருடன் பேச வாய்ப்புக் கிடைத்தது. அவரது குடும்பத்தினர், நண்பர்களுக்கு மனமார்ந்த இரங்கல்கள். அவரது மரபு தலைமுறைகளைத் தொடர்ந்து ஊக்குவிக்கும்" என்று குறிப்பிட்டுள்ளார். 

Leave a Reply