சிவாஜியின் வீடே கோயில் போல - புன்னகை அரசி கே.ஆர். விஜயா
சினிமா
நடிகர்திலகத்தை பற்றி கே ஆர் விஜயா சொன்ன விஷயங்கள்:
தமிழ் சினிமாவின் சிங்கம் சிவாஜி கணேசன். சிவாஜி விஜயாவை பார்க்கும்போதெல்லாம் சும்மா வெறுப்பேத்துவாராம். "இதோ வர்றாங்க பாரு, நாங்க எல்லாம் உயிரைக் கொடுத்து நடிக்கிறோம். இவங்க சும்மா சிரிச்சுக்கிட்டே பேர் வாங்கிடுவாங்க!"ன்னு சொல்வாராம். ‘இரு மலர்கள்’ படப்பிடிப்பில் பத்மினியோட உட்கார்ந்திருந்தப்போ, இவங்களைப் பார்த்து அவர் அடிச்ச கமெண்ட் இது. அதுக்கு இவங்களோட பதில், "வேறென்ன, மில்லிமீட்டர் மல்லிச் சிரிப்புதான்".
சிவாஜியின் பேரை உச்சரிக்கும்போதே இவங்களுக்குள்ள ஒரு சின்ன மின் அதிர்வு ஏற்படுமாம். ஏன்னா, ஒரு நடிகராகவும், ஒரு மனிதராகவும் அவருடைய தாக்கம் அவ்வளவு வலிமையானதாம்.
சிவாஜியின் புருவம் பேசும், கண் சிரிக்கும், தாடை அழும், தோள்கள் கோபப்படும், உதடு உருகும்.
அவருடன் மற்ற நடிகர், நடிகைகள் எவ்வளவு நீளத்துக்கு வசனம் பேசினாலும், சின்னதொரு அசைவு, அதாவது 'பாடி லாங்குவேஜ்' மூலம் அதுக்குச் சரியா ரியாக்ட் பண்ணக்கூடிய திறமை அவருக்கு இருந்தது.
கே.ஆர். விஜயா, சிவாஜி கூட நடிச்ச முதல் படம் 'கை கொடுத்த தெய்வம்'. அந்தப் படத்துல சிவாஜிக்கு சாவித்திரிதான் ஜோடி. இவங்களுக்கு சிவாஜியின் தங்கை மாதிரியான ரோல். வட இந்தியாவில், இவங்க வீட்டுக்கு வர்ற சிவாஜிக்கு தினமும் ரொட்டி செஞ்சு போடுவாங்களாம். அதைப் பார்த்து வெறுத்துப்போன அவர், ஒருநாள் தன் கையாலேயே சமைக்க ஆரம்பிப்பாராம்.
அம்மியின் முன்னாடி காலை நீட்டி வசதியா உட்கார்ந்துகிட்டு, "மிளகாய் கொண்டு வா" என்பாராம். இவங்க புரியாம முழிக்கவும், அவரே எப்படியோ தேடிப்பிடிச்சு மிளகாய் வத்தலை எடுத்து மசாலா அரைப்பாராம். உடனே இவங்க, "ஓ, மிர்ச்சி, மிர்ச்சி"ன்னு சொல்லவும், "ஆமா, நல்லா மிதிச்சு, மிதிச்சு"ன்னு ஒற்றைக் காலைத் தூக்கி எழுந்துவிடுவாராம். அந்த காட்சியை மறக்க முடியாது.
'கை கொடுத்த தெய்வம்' படத்துக்குப் பிறகு, 'செல்வம்', 'கந்தன் கருணை', 'ஊட்டி வரை உறவு' என நிறைய படங்கள் அடுத்தடுத்து சிவாஜி கூட நடிச்சாங்களாம். எல்லாமே ஒரே நேரத்துல படப்பிடிப்புகள் இருந்தாலும், ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம் என்பதால் நடிப்பில் நல்ல வித்தியாசம் காட்ட முடிஞ்சதாம்.
அந்தக் காலத்துல பெரும்பாலான நட்சத்திரங்கள் டைரக்டர்களின் கைப்பாவையாத்தான் இருந்தாங்க. அவங்க எப்படிச் சொல்றாங்களோ, அப்படி நடிச்சா போதும். ஆனா, அதையும் தாண்டி இவங்களால நல்லா ஸ்கோர் பண்ண முடிஞ்சதுன்னா, அதுக்கு சிவாஜி கொடுத்த சின்னச் சின்ன டிப்ஸ்களும் காரணமாம்.
சிவாஜியும் ஏ.பி. நாகராஜனும்
சிவாஜி ஒரு பேராசிரியர்ன்னா, ஏ.பி. நாகராஜன் இன்னொரு பேராசிரியராம். இவங்க இந்த இரண்டு வாத்தியார்கள் நடுவில் மாட்டிக்கிட்ட அனுபவமும் இவங்களுக்கு ஏற்பட்டிருக்கு. ஏ.பி. நாகராஜன் புராணப் படங்களை இயக்கிய கலைமேதை. அவர் இயக்கின 'சரஸ்வதி சபதம்' ஒரு மெகா ஹிட் படம்.
சிவாஜி வித்யாபதி என்ற கவிஞராக நடிக்க, இவங்க செருக்குமிக்க ராணியாக நடிப்பாங்களாம். 'ராணி மகா ராணி' பாடல் அந்தப் படத்தில்தான் இடம் பெற்றதாம். "திமிராகப் பேசி, திமிராக நடிக்கணும், அதுவும் சிவாஜி முன்னாடி!" ரொம்ப வியர்த்துப் போகுமாம்.
அப்போ, நீள நீள வசனங்களை மனப்பாடம் பண்ணி பேசுவது ரொம்பச் சவாலான விஷயமா இருந்துச்சு. (டப்பிங் வசதி எல்லாம் கிடையாதாம், 'லைவ்'வாகத்தான் சவுண்ட் ரெக்கார்ட் பண்ணுவார்களாம்). அப்போ ஏ.பி. நாகராஜன் ஒரு டயலாக் டெக்னிக்கைச் சொல்லிக் கொடுத்தாராம்:
வசனத்தைப் பேச ஆரம்பிச்சதும், வசனத்துக்கான முகபாவனையை கொஞ்சம் கொஞ்சமா கூட்டணும்.
அதேபோல, ஒரு வாக்கியத்தின் ஆரம்ப வார்த்தையையும், முடிவு வார்த்தையையும் ரொம்பத் தெளிவா வாயைத் திறந்து உச்சரிக்கணும். அப்போதான் டயலாக் டெலிவரி தெளிவாகப் பதிவாகும்.
இந்த யுக்தியைத்தான் இவங்க இன்றைக்கும் கடைப்பிடிக்கிறாங்களாம்.
'செல்வம்', 'பாரத விலாஸ்', 'மிருதங்க சக்கரவர்த்தி', 'தங்கப் பதக்கம்', 'ரிஷி மூலம்', 'கல்தூண்', 'ஜெனரல் சக்கரவர்த்தி'ன்னு நிறைய படங்களில் கணவன் மனைவியா நடிச்சிருக்காங்க. சிவாஜியோட படங்களிலேயே அதிக நாள் ஓடி, அதிக வசூல் செய்த படம் 'திரிசூலம்'. இதுலதான் 'மலர் கொடுத்தேன்' பாடல் இடம்பெற்றது.
கிராமப் புறங்கள்ல வளைகாப்பு, சீமந்தம் நிகழ்ச்சிகள்ல கட்டாயம் இந்தப் பாடலை ஒளிபரப்புவார்கள்.
'சுமதி, சுமதி' என்று அவர் டெலிபோனில் அழைக்க, "என்னங்க, எப்படி இருக்கீங்க?" என்று நான் கதறியழ, நிஜமாகவே அழுது நடிச்ச காட்சி அது.
'ஜெனரல் சக்கரவர்த்தி' படத்துல கெட்டுப்போன மகளைக் கைநீட்டி அடிக்கும் காட்சி. இவங்களுக்கு அடிக்கவே வரலையாம். 'இது என்ன, செல்லமா கன்னத்தைத் தட்டுற மாதிரி? கைநீட்டி அடிக்கணும்! அப்போதான் படத்தோட எஃபெக்ட் தெரியும்'னு சிவாஜி சொல்லிக் கொடுத்தாராம். அவர் சொன்ன மாதிரியே கையை வீசி அறைந்தாராம். பிரமாதமா ஓகே ஆனதாம்.
இதெல்லாம் சின்னச் சின்ன யோசனைகள்தான். ஆனால், சரியான நேரத்துல மிகச் சரியா 'கைடு' பண்ணும் திறமை சிவாஜிக்கு இருந்தது. அவர் ஒரு சினிமா டிக்ஷனரி.
அன்பு மழை பொழிந்த கமலாம்மா
சிவாஜியின் மனைவி கமலாம்மா, கே.ஆர். விஜயாவுக்குப் பாசமிகு தோழியாக இருந்தாங்க. 'தர்மராஜா' படப்பிடிப்புக்கு ஹாங்காங், பாங்காங் போனப்போ கமலாம்மாவும் கூட வந்திருந்தாராம். பிளாட்பாரக் கடைகளில் மாங்காய் வத்தைகளைப் பார்த்த கமலாம்மா, "விஜயா, மாங்காய் சாப்பிடலாமா? ஆசையாக இருக்கு" என்று குழந்தை மாதிரி ஆசைப்பட்டு கேட்டாராம். அப்புறம் இருவரும் கீழே இறங்கிப் போய் உப்பு, காரம் போட்ட மாங்காயை ரசிச்சுச் சாப்பிட்டாங்களாம்.
'மிருதங்க சக்கரவர்த்தி' படப்பிடிப்பின்போது, இவங்க உடுத்திருந்த 'கம்பெனி காஸ்ட்யூம்' கமலாம்மாவுக்குத் திருப்தி தரவில்லையாம். உடனே, சென்னைக்கு வந்து அழகான புடவைகளை வாங்கி வந்து இவங்களைக் கட்டிக்கொள்ளச் செய்தாராம். எதையும் எதிர்பார்க்காமல் அன்பைப் பொழியும் அன்னை அவர்.
சிவாஜியின் அட்வைஸ்
சிவாஜி, சினிமாவில் நடிப்பதோடு தன்னுடைய பங்கு நிறைவடைஞ்சிருச்சுன்னு நினைக்க மாட்டாராம். 'பர்சனலா'வும் நிறைய அட்வைஸ் பண்ணுவாராம்.
ஒருமுறை 'சொர்க்கம்' படப்பிடிப்பின்போது இவங்க சின்ன கலவரத்தில் இருந்திருக்காங்க. "என்ன விஜயா, டல்லா இருக்க?"ன்னு கேட்டாராம். இவங்க மறைக்கப் பார்த்தும், "என்கிட்ட மறைக்காதே"ன்னு துருவி விசாரிச்சாராம்.
"எங்க வீட்டுக்காரர் வெளிநாடு போயிருக்கார். இந்த சமயம் பார்த்து எனக்கு ஒரு மிரட்டல் கடிதாசி வந்திருக்கு. குழந்தையைக் கடத்திடுவோம்னு என்னவோ பயமுறுத்தி இருக்காங்க"ன்னு கவலையோட சொன்னதும், "அட, இவ்வளவுதானா! பயப்படாதே, இதைச் சரியாக 'ஹேண்டில்' பண்ணலாம்"ன்னு சொன்னதோடு, ஆறுதல் சொல்லி இவங்களோட கலவரத்தைப் போக்கினாராம்.
உண்மையா சொல்லணும்னா, இவங்களை விட இவங்க கணவர் வேலாயுதம் தான் சிவாஜியின் 'பெஸ்ட் ஃப்ரெண்ட்'டாம். இரண்டு பேரும் சேர்ந்துவிட்டால், கல், மண் முதல் மேகம், ஆகாயம் வரை எல்லா விஷயத்தையும் புரட்டிப் புரட்டிப் பேசுவார்களாம். சிவாஜி இறந்த செய்தி கேட்டு இவங்க கணவர் ரொம்பத் துடிச்சுப் போனாராம்.
சிவாஜி எத்தனையோ முறை இவங்களை விருந்துக்குக் கூப்பிட்டிருந்தும், போக நேரம் இருந்ததில்லையாம். "விஜயா, கமகமன்னு மீன் குழம்பு, சூப்பர் பிரியாணி அனுப்பி வைக்கவா?" என்பாராம் அன்புடன். காபி மட்டும் அவர் கையால் வாங்கிச் சாப்பிட்டிருக்காங்க.
நடிகர் திலகத்தின் அந்த வீடே கோயில் போல இருக்கும். ஆட்களும், விருந்தாளிகளுமாக 'ஜே ஜே'ன்னு இருக்கும். பிரபு, ராம்குமார் கூட இவங்க பிள்ளைகள் போலத்தான். ஏதாவது பிரச்சனைன்னா, "சொல்லுங்கம்மா, வந்து நிற்கிறோம்" என்பார்களாம். மனிதநேயமிக்க நல்ல முத்துக்கள். நல்லதொரு குடும்பமாக இருக்கும் பல்கலைக்கழகம் அது.
சிவாஜி ஒரு சகாப்தம். அவருடன் ஜோடியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது இவங்களோட பாக்கியம்!.
நன்றி . செந்தில்வேல் சிவராஜ்























