தமிழர் பண்பாட்டின் பெருமை பறை மேள இசை
'பறை' பற்றி பலரும் பேசும் காலம் இது. தமிழ் பாரம்பரிய கலை வடிவங்களில் ஒன்றாகப் பறை மேள இசை சிறப்பு இடம் வகிக்கிறது. பழங்காலம் தொட்டே தமிழர் வாழ்க்கையில் பறை முக்கிய பங்கு வகித்துள்ளது. பழங்காலத் தமிழர் வாழ்வியலில் செய்தியூடகம் என்று ஒன்று இல்லாத காலகட்டத்தில், ஒரு நாட்டில் நடக்கும் நிகழ்வுகளை, அறிவித்தல்களை, அரசக் கட்டளைகளை ஊர் ஊராகச் சென்று சொல்லுதல் "பறைதல் என்றும், அவ்வாறு ஊர் ஊராகச் சென்று சொல்பவர் பறையர் என்பதும் காரணப்பெயர்களாகும்.
பறை மேள இசை ஒரு காலத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தின் கலை எனக் கருதப்பட்டாலும் இன்று அது தமிழர் அடையாளத்தின் பெருமையாக மாறியுள்ளது. சமூக நீதி இயக்கங்களிலும், கல்வி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளிலும் பறை ஒலிக்கும் போது அது ஒரு உரிமை ஒலியாக மக்களிடம் சென்று சேர்கிறது. பறையின் ஒலி ஆற்றல், வீரியம், ஒற்றுமை, எதிர்ப்பை வெளிப்படுத்தும் ஒரு குரல்.
பல சமூக அமைப்புகள் தற்போது பறை மேள இசைக்கலையை ஊக்குவித்து வருகின்றன. அந்த வகையில் பறைமேள மற்றும் சொர்ணாளி கலைஞர்களை கௌரவித்து அக்கலைகளை ஊக்குவிக்கும் விதமாக 2025. 10. 11 (சனிக்கிழமை) அன்று காலை 10.00 மணியளவில், மூன்றாவது கண் நண்பர்கள் குழுவின் ஓர் அங்கமாகிய முரசம் பேரிசை கலைகள் கற்கை மன்றத்தின் ஏற்பாட்டில் பறை, சொர்ணாளி ஆற்றுகை நிகழ்வு நடைபெற்றது. அதில் களுதாவளையைச் சேர்ந்த பறை மேளக் கலைஞரான ச. திவ்ய புத்திரனும் சொர்ணாளி கலைஞரான ச. விஜய புத்திரனும் மற்றும் பறை இசைக் கலை வளர்ச்சிக்கு ஆதரவாக இயங்கும் தேனூரான் அண்ணாவியாரும் கௌரவிக்கப் பட்டதோடு பறை மற்றும் சொர்ணாளி என்பன இசைக்கப்பட்டு நிகழ்வில் பங்கு பற்றியவர்களுக்கு கற்றுக் கொடுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து மதிய விருந்துபசாரத்துடன் நிகழ்வு இறுதிக்கட்டம் அடைந்து முரசறைதல் சார்ந்த கருத்துப்பரிமாற்றத்துடன் நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது. இதன் மூலம் பழமையான ஒரு கலை வடிவம் புதிய தலைமுறையிலும் நிலைத்திருக்கும் வகையில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பறை மேள இசை வெறும் இசை அல்ல : அது ஒரு சமூக வரலாறு, எதிர்ப்பு, பெருமை,மற்றும் பண்பாட்டு அடையாளம். அதன் ஒலியில் ஒற்றுமையும், உயிரோட்டமும் உறைந்துள்ளன. பறை மேள இசை என்பது காலத்தால் அழியாத தமிழர் பாரம்பரிய கலை. அது வெறும் ஒரு கலை வடிவமல்ல அது ஒரு அடையாளம், ஒரு குரல், ஒரு எதிர்ப்பு. இந்த மரபை நாம் பாதுகாக்கும் பொறுப்பு ஒவ்வொருவரிடமும் உள்ளது. பறையின் ஒலி என்றும் ஒலித்துக்கொண்டே தமிழ் பண்பாட்டை உயிர்ப்புடன் கொண்டுசெல்லட்டும்.
லவக்குமார் லாவணியா.
நுண்கலைத்துறை மாணவி
கிழக்குப் பல்கலைக்கழகம்.






















