• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வர்த்தக ஒப்பந்தம் ஏற்படாவிட்டால் சீனா மீதான வரியை 155 சதவீதமாக உயர்த்துவேன்- டிரம்ப் மிரட்டல்

அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா, சீனா உள்பட பல்வேறு நாடுகள் மீது பரஸ்பர வரிகளை விதித்தார். இதற்கு பதிலடியாக அமெரிக்க பொருட்கள் மீது சீனா கூடுதல் வரியை விதித்தது. இதனால் அமெரிக்கா-சீனா இடையே வர்த்தக போர் ஏற்பட்டது. இப்பிரச்சனையை தீர்க்க இரு நாடுகள் இடையே பேச்சுவார்த்தை நடந்தது.

இதையடுத்து சீனா மீதான கூடுதல் வரி விதிப்பை டிரம்ப் நிறுத்தி வைத்தார். இதற்கிடையே அரியவகை கனிமங்கள் மற்றும் அது சார்ந்த தொழில்நுட்ப வர்த்தகத்தில் சீனா முக்கிய கட்டுப்பாடுகளை விதித்ததால் அதிருப்தி அடைந்த டிரம்ப், வருகிற நவம்பர் 1-ந்தேதி முதல் சீனா மீது கூடுதலாக 100 சதவீத வரி விதிக்க உள்ளதாக சமீபத்தில் அறிவித்தார்.

இந்த நிலையில் சீனாவுக்கு டிரம்ப் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

சீனா எங்களுக்கு மிகவும் மரியாதை அளித்து வருவதாக நான் நினைக்கிறேன். அவர்கள் வரிகள் மூலம் எங்களுக்கு மிகப்பெரிய அளவில் பணத்தை செலுத்துகிறார்கள். அவர்கள் 55 சதவீதம் வரி செலுத்துகிறார்கள். சீனாவுடன் ஒரு அற்புதமான ஒப்பந்தத்தை நாங்கள் செய்யப்போகிறோம் என்று நினைக்கிறேன்.

இது ஒரு சிறந்த வர்த்தக ஒப்பந்தமாக இருக்கும். இது இரு நாடுகளுக்கும் அருமையாக இருக்கும். மேலும் இது முழு உலகிற்கும் அருமையாக இருக்கும். நவம்பர் 1-ந்தேதிக்குள் இந்த வர்த்தக ஒப்பந்தம் ஏற்படாவிட்டால் சீனா மீதான வரியை 155 சதவீதமாக உயர்த்துவேன்.

அரிய மண் தாதுக்களை வைத்து சீனா எங்களை அச்சுறுத்தியது. நான் அவர்களை வரி விதிப்புகளால் அச்சுறுத்தினேன். அதே வேளையில் சீன அதிபர் ஜின்பிங்குடனான எனது நல்ல உறவால் மிகவும் நியாயமான ஒப்பந்தம் ஒன்று உருவாகும். வரும் நாட்களில் தென்கொரியாவில் சீன அதிபரை சந்திக்க உள்ளேன்.

நிறைய நாடுகள் அமெரிக்காவைப் பயன்படுத்திக் கொண்டன. அவர்களால் இனி சாதகமாகப் பயன்படுத்த முடியாது.

இவ்வாறு டிரம்ப் கூறினார்.
 

Leave a Reply