அனர்த்த நிலைமையை கருத்திற்கொண்டு அரசாங்கம் அவசரமாக செயற்பட வேண்டும்- சஜித் கோரிக்கை
இலங்கை
அனர்த்த நிலைமைக்கு மத்தியில் அனர்த்த முகாமைத்துவக் குழு மூலம் வழங்கப்பட வேண்டிய சேவைகளை அவசரமாக முன்னெடுக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (21) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
மாத்தறை மாவட்டத்தில் நில்வலா அணைக்கட்டு பிரச்சினை காரணமாக அதிக அளவிலான விவசாய வயல் நிலங்கள் சேதமடையப் பார்க்கின்றன. எமக்கு கிடைக்கும் தகவல்களின் படி இந்த அனர்த்த நிலையால், 3 மனித உயிர்கள் பலியாகியுள்ளன என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
இதேவேளை, அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணங்களைப் பெற்றுக் கொடுக்க தாமும் தயாராக உள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் மேலும் தெரிவித்தார்.
கடந்த காலங்களில், மக்கள் விடுதலை முன்னணியால் ரெட் ஸ்டார் படை போன்ற திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டன. இந்தத் திட்டங்களுக்கு மேலதிகமாக, அரசாங்கமும் வேலைத்திட்டமொன்றை முன்னெடுங்கள் எனவும் விசேடமாக இந்த அனர்த்த முகாமைத்துவ வேலைத்திட்டத்திற்கு எமது கட்சியின் பங்களிப்பையும் பெற்றுத் தருவோம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் அதிகரிக்கும் என எதிர்பாரக்கப்படும் அனர்த்த நிலைமைக்கு மத்தியில் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தை உடனடியாக நாளை காலையில் அல்லது இன்றைய தினத்திலேனும் நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் இங்கு கோரிக்கை விடுத்தார்.





















