• Welcome to TamilsGuide
செய்திகள் 1

டிரம்புக்கு எதிராக அமெரிக்கா முழுவதும் வெடித்த போராட்டம் - வீதிகளில் இறங்கிய 70 லட்சம் மக்கள்

"No kings" என்ற முழக்கத்துடன் அமெரிக்கா அதிபர் டொனல்டு டிரம்புக்கு எதிராக மிகப்பெரிய போராட்டம் வெடித்துள்ளது.

டிரம்ப் அரசின் குடியேற்றவாசிகளுக் எதிராக அடக்குமுறைகள், அரசுத் துறைகளில் மேற்கொள்ளப்படும் அதிகப்படியான பணிநீக்கங்கள், பொருளாதார கொள்கைகள் உள்ளிட்டவை அந்நாட்டில் அதிருப்தி அலையை ஏற்படுத்தி வருகிறது.

சர்வாதிகார போக்குடன் செயல்படுவதாக டிரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக அமெரிக்கா முழுவதும் தொடர்ந்து போராட்டங்களை வழிநடத்தி வரும் பல இடதுசாரி சார்பு அமைப்புகளின் கூட்டணியே நோ கிங்ஸ் ஆகும்.

இதே கூட்டணி முன்பு ஜூன் மாதம் நோ கிங்ஸ் போராட்டத்தை நடத்தியது. இந்த இயக்கத்தில் 200க்கும் மேற்பட்ட அமைப்புகள் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில் நேற்று மீண்டும் மிகப்பெரிய அளவில் மீண்டும் போராட்டம் ஒருங்கிணைக்கப்பட்டது.

"மன்னர்கள் வேண்டாம்" என்ற முழக்கத்துடன் ஏற்பாடு செய்த ஆர்ப்பாட்டங்களில் நேற்று நாடு முழுவதும் 2,700 நகரங்களில் 7 மில்லியனுக்கும் (70 லட்சத்திற்கும்) அதிகமான மக்கள் பங்கேற்றனர் என்று நோ கிங்ஸ் இயக்கம் தெரிவித்தது.

நியூயார்க் நகரில், 100,000 க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் டைம்ஸ் சதுக்கத்தில் கூடி, "மன்னர்கள் இல்லை", "ஜனநாயகம், சாம்ராஜ்யம் அல்ல", "மக்களுக்கே அதிகாரம்" என்று எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பினர்.

இதேபோல், வாஷிங்டன் டிசி, லாஸ் ஏஞ்சல்ஸ், டென்வர், கலிபோர்னியாவின் சான் டியாகோ, சான் பிரான்சிஸ்கோ, சிகாகோவில் பெரிய அளவிலான ஊர்வலங்கள் நடத்தப்பட்டன. மேலும் இங்கிலாந்து தலைநகர் லண்டனிலும் இந்த போராட்டங்கள் நடைபெற்றன.
 

Leave a Reply