• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஆண் துணைகளை வாடகைக்கு அமர்த்தும் பெண்கள்.. சீனாவில் வைரலாகும் Kens கலாச்சாரம்

சீனா, ஜப்பான், ரஷியா உள்ளிட்ட நாடுகளில் திருமணம் மற்றும் குழந்தை பெறுதலை இளைய தலைமுறையினர் தவிர்க்கத் தொடங்கியுள்ளது அந்நாடுகளின் ஆட்சியாளர்களைக் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

இதனால், திருமணம் மற்றும் குழந்தை பெறுதலில் ஆர்வத்தை ஏற்படுத்த அரசுகள் அதிக சலுகைகளை அறிவித்து வருகின்றன.

இந்நிலையில், இந்தியாவுக்கு நேர்மாறாக மக்கள்தொகையில் முதியோரை அதிகம் கொண்டுள்ள சீனாவில் பெண்கள் மத்தியில் புதிய கலாசாரம் ஒன்று வேகமெடுத்து வருகிறது.

அங்குள்ள வசதிபடைத்த மற்றும் மேல் நடுத்தர குடும்பப் பெண்கள், வழக்கமான உறவுகளைத் தவிர்த்து, தங்கள் தேவைகளுக்காக 'கென்ஸ்' என்று அழைக்கப்படும் ஆண்களைப் வாடகைக்கு அமர்த்தும் முறையை விரும்புகிறார்கள்.

'கென்ஸ்' என்றால் என்ன? என்ற தலைப்பில் இதுதொடர்பான காணொளி ஒன்று வைரலாகி வருகிறது.

அதில், 'கென்' என்பது ஓர் இளமையான, அழகான ஆண் பணியாளர் போன்றவர். சீனப் பெண்களின் பாரம்பரியமற்ற உறவுகளுக்கான தேவையைப் பூர்த்தி செய்யும் ஒரு சேவைத் துறையாக இது உருவாகியுள்ளது.

இந்த ஆண்கள் சமையல், சுத்தம் செய்தல், வீட்டு வேலைகள், ஷாப்பிங் மற்றும் குழந்தைகளைப் பள்ளியில் இருந்து அழைத்து வருவது போன்ற வீட்டு வேலைகளைச் செய்கிறார்கள். மேலும், ஒரு கணவனைப் போலவே பெண்களுக்கு எமோஷனல் சப்போர்ட் ஆகவும் இருக்கிறார்கள்

உயரமான, உடல் தகுதி கொண்ட, மென்மையான போக்கு கொண்டவர்களே கென்ஸ்களாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

இவர்கள் பெண்களிடம் ஒருபோதும் வாதிட மாட்டார்கள். மேலும், சாதாரண கணவர்களைப் போல் மறுப்புக் கூறாமல் பெண்களின் தேவைகள் மற்றும் விருப்பங்களைப் பூர்த்தி செய்ய எப்போதும் தயாராக இருப்பார்கள்.

இந்தக் கலாசாரம் தலைதூக்க முக்கிய காரணம், வசதிபடைத்த பெண்கள் ஒரு துணையுடன் வாழ விரும்பினாலும், பாரம்பரிய உறவில் இருக்கும் எந்தவொரு கட்டாயமான பொறுப்புக்கும் கட்டுப்பட விரும்புவதில்லை என்பதுதான்.

இதற்கு உதாரணமாக, 40 வயதான ஒரு பெண் தொழிலதிபர், தன் மனநிலையைப் பொறுத்து பல கென்ஸ்களை வேலைக்கு அமர்த்தி, அவர்களைச் சுழற்சி முறையில் மாற்றிக்கொள்வதாகவும் காணொளியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தக் காணொளி 4.4 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று, ஆதரவாகவும் எதிராகவும் கருத்துக்களை ஈர்த்து வருகிறது. 
 

Leave a Reply