நீங்க அழகா இருக்கீங்க.. சிகரெட் பிடிக்கிறத நிறுத்துங்க - துருக்கி அதிபர் அறிவுரை - மெலோனி Thug ரிப்ளை
காசாவில் போர் நிறுத்தம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட நேற்று உலக தலைவர்கள் எகிப்தில் கூடினர். அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் எகிப்து இணைந்து தலைமை தாங்கிய இந்த மாநாட்டில் பாகிஸ்தான், துருக்கி, கத்தார் மற்றும் இத்தாலி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.
மாநாட்டில் இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியின் புகைப்பிடிக்கும் பழக்கத்தைப் பற்றி துருக்கி அதிபர் எர்டோகான் கிண்டலாகப் பேசியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
மாநாட்டில் மெலோனியிடம் பேசிய எர்டோகான், "நீங்கள் விமானத்தில் இருந்து இறங்கியபோது பார்த்தேன். நீங்கள் மிகவும் அழகாக இருக்கிறீர்கள். ஆனால், உங்கள் கையில் உள்ள சிகரெட் இருந்தது. இந்த பழக்கத்தை நீங்கள் கண்டிப்பாக நிறுத்த வேண்டும்" என்று கூறினார்.
எர்டோகானின் பேச்சைக் கேட்ட அருகில் இருந்த பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் சிரித்துக்கொண்டே குறுக்கிட்டு, "அது அசாத்தியம்!" என்று நகைச்சுவையாகக் கருத்து தெரிவித்தார்.
இதற்கு மெலோனியும் அதேபோல வேடிக்கையாகப் பதிலளித்தார். அதாவது, "எனக்குத் தெரியும். ஆனால், நான் புகைப்பிடிப்பதை நிறுத்தினால், எனக்கு எரிச்சல் அதிகமாகி, யாரையாவது ஏதாவது சொல்லிவிடுவேனோ!" என்று அஞ்சுவதாக கூறி சிரித்தார். இதுதொடர்பாக வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
துருக்கியை புகைப்பழக்கம் இல்லாத நாடாக மாற்ற வேண்டும் என்ற நோக்குடன் எர்டோகான் அடிக்கடி கூறி வருகிறார்.
மறுபுறம், வெளிநாட்டுத் தலைவர்களுடன் நல்லுறவை வளர்த்துக் கொள்ள தனது புகைப்பழக்கம் உதவியதாக மெலோனி முன்பு ஒரு புத்தகத்தில் குறிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.





















