• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இந்திய உதவி திட்டத்தின் கீழ் இரத்தினபுரியில் வீடுகள் கையளிப்பு

இலங்கை

இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அனுர கருணாதிலக ஆகியோர் இணைந்து இரத்னபுரியிலுள்ள வண. தம்மவன்ச நஹிமிகம மாதிரி கிராமத்தை 24 பயனாளி குடும்பங்களுக்கு கடந்த 11ம் திகதி உத்தியோகபூர்வமாக திறந்து வைத்து கையளித்தனர்.

இரத்தினபுரியில் இந்தத் திட்டத்தை செயல்படுத்தும் போது, நகர மேம்பாடு, கட்டுமானம் மற்றும் வீட்டுவசதி அமைச்சராக கௌரவ அனுர கருணாதிலக பொறுப்பேற்றார். பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு பிரிதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ராஜபக்ஷ ஆகியோரும் குறித்த நிகழ்வில் பங்குபற்றியிருந்தனர்.

இந்த நிகழ்வில் இலங்கையின் வீட்டுவசதி, கட்டுமானம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள், தேசிய வீட்டுவசதி மேம்பாட்டு ஆணையத்தின் தலைவர் மற்றும் மூத்த அதிகாரிகள், சபரகமுவ மாகாண சபை மற்றும் இரத்தினபுரி மாவட்ட நிர்வாக அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

குறித்த நிகழ்வில் கருத்து தெரிவித்த உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா இலங்கையின் வளர்ச்சிக்கு, குறிப்பாக வாழ்வாதாரங்களை மேம்படுத்துவதற்கும் சமூகங்களின் வளர்ச்சிக்கு ஆதரவளிப்பதற்கும் இந்தியாவின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை வலியுறுத்தினார்.

மாதிரி கிராமத் திட்டத்திற்காக இந்திய அரசுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் அக்டோபர் 2017 இல் கையெழுத்தானது. இந்தத் திட்டம் இலங்கையின் 600 குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கான வீட்டு வசதிகளை உள்ளடக்கியது, குடும்பங்களுக்கு ஒரு மாவட்டத்திற்கு 24 வீடுகளைக் கொண்ட ஒரு மாதிரி கிராமம். இலங்கையின் வீட்டுவசதி, கட்டுமானம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சகம் இந்திய அரசின் மானிய ஆதரவுடன் இந்தத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

15 மாவட்டங்களில் உள்ள மாதிரி கிராமங்கள் முன்பே ஒப்படைக்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்த திட்ட முன்னேற்றம் 97மூ க்கும் அதிகமாக உள்ளது, மீதமுள்ள மாதிரி கிராமங்களும் விரைவில் திறக்கப்பட்டு பயனாளிகளிடம் ஒப்படைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

Leave a Reply