• Welcome to TamilsGuide
செய்திகள் 1

செக் தேர்தல் முடிவுகள் சொல்லும் சேதி

மத்திய ஐரோப்பிய நாடான செக் குடியரசில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஆளுங் கட்சி தோல்வியைத் தழுவி உள்ளது. மேனாள் பிரமரும், விவசாய நிறுவன பெரு வணிகருமான அன்றஜ் பபிஸ் தலைமையிலான ‘ஆம்’ கட்சி அதிக எண்ணிக்கையான வாக்குகளைப் பெற்று ஆட்சியமைக்கும் தகுதியைப் பெற்றுள்ளது. ‘ திருப்தியற்ற பிரசைகளுக்கான செயற்பாட்டுக் கட்சி’ என உத்தியோகபூர்வமாக அறியப்படும் இந்தக் கட்சி 34.51 விழுக்காடு வாக்குகளைப் பெற்றுள்ளது. இந்நிலையில், ‘ சுதந்திரம் மற்றும் நேரடி ஜனநாயகக் கட்சி’ மற்றும் ‘ மோட்டோரிஸ்ட் கட்சி’ என்பவற்றின் ஆதரவுடன் இந்தக் கட்சி ஆட்சியமைக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

10.7 மில்லியன் மக்கள் வாழும் செக் குடியரசில் 8.3 மில்லியன் வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றவர்களாக உள்ளனர். அக்டோபர் 3 மற்றும் 4 ஆகிய நாட்களில் நடைபெற்ற தேர்தலில் 68.9 விழுக்காடு வாக்களர்கள் வாக்களித்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 1998ஆம் ஆண்டின் பின் நடைபெற்ற தேர்தல்களில் அதிக எண்ணிக்கையான மக்கள் கலந்துகொண்ட தேர்தலாக இது உள்ளது. இந்தத் தேர்தலில் முதல் தடவையாக வெளிநாடுகளில் வாழும் வாக்காளர்களின் நன்மை கருதி இணைய வழி மூலம் வாக்களிக்கும் வசதியும் ஏற்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த வசதியைப் பயன்படுத்தி 10,000 வரையானோர் வாக்களித்திருந்தனர்.

மேனாள் சோவியத் ஒன்றிய நாடான மோல்டோவாவில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல்களின் பரபரப்பு ஓய்வதற்கு இடையில் மற்றொரு மேனாள் சோவியத் ஒன்றிய நாடான செக் குடியரசில் தேர்தல் நடைபெற்று உள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்து பயணித்தல், நேட்டோவில் உறுப்புரிமை பெறுதல் உள்ளிட்ட விடயங்களே இரண்டு தேர்தல்களிலும் அதிகம் கவனம் பெற்றிருந்தன. தேர்தலுக்கு முந்திய கருத்துக் கணிப்புகளில் வெளிப்பட்ட முடிவுகளே செக் குடியரசு தேர்தலிலும் பிரதிபலித்திருந்ததைப் பார்க்க முடிந்தது. எனினும், தேர்தல் முடிவுகள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மத்தியில் திருப்தியற்ற கருத்துகள் உலா வருவதை அவதானிக்க முடிகின்றது.

200 உறுப்பினர்களைக் கொண்ட செக் குடியரசு நாடாளுமன்றத்தில் ‘செக் நாட்டு ட்ரம்ப்’ என வர்ணிக்கப்படும் பபிஸ் தலைமையிலான கட்சி 80 ஆசனங்களை மாத்திரமே கொண்டுள்ளது. அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் 1,940,507 வாக்குகளை இந்தக் கட்சி பெற்றுள்ளது. கடந்த தேர்தலை விடவும் 8 ஆசனங்களை மேலதிகமாக இந்தக் கட்சி பெற்றுள்ளது.

இந்தக் கட்சிக்கு ஆதரவான சுதந்திரம் மற்றும் நேரடி ஜனநாயகக் கட்சி’ 7.78 விழுக்காடு வாக்குகளைப் பெற்றுள்ளது. 437,611 வாக்குகளை இந்தக் கட்சி பெற்றுள்ளது. இக்கட்சியின் சார்பில் 15 பேர் நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகி உள்ளனர்.

‘மோட்டோரிஸ்ட்’ என அறியப்படும் புதிய கட்சி 6.77 விழுக்காடு வாக்குகளைப் பெற்றுள்ளது. 380,601 வாக்குகளைப் பெற்ற இந்தக் கட்சி போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே 5 விழுக்காட்டுக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றில் பிரிவேசித்து சாதனை படைத்துள்ளது. தீவிர வலதுசாரிப் போக்குடைய இக்கட்சியின் சார்பில் 13 உறுப்பினர்கள் தெரிவாகி உள்ளனர்.

இந்தக் கட்சிகள் மூன்றும் தேர்தலுக்கு முன்பு கூட்டணி எதனையும் அமைத்துக் கொள்ளாத போதிலும், தேர்தலுக்குப் பிந்திய சூழலில் இணைந்து பயணிக்க இணக்கம் தெரிவித்துள்ளதைப் பார்க்க முடிகின்றது. எனினும், ஆம் கட்சி தனித்தே ஆட்சியமைக்க விரும்புவதாக கட்சியின் தலைவர் பபிஸ் கூறியுள்ளார்.

இந்நிலையில் 108 உறுப்பினர்களின் ஆதரவோடு புதிய ஆட்சி அமையவுள்ளது. எனினும், அரசியலமைப்பு மாற்றங்களை உருவாக்குவதற்குத் தேவையான 120 உறுப்பினர்களின் ஆதரவு ஆளுங் கட்சிக்கு இல்லாமல் உள்ளமை குறிப்பிடத்தக்கது. வலுவான நிலையில் உள்ள மூன்று எதிர்க் கட்சிகளும் 92 ஆசனங்களை தமக்கிடையே பகிர்ந்து கொண்டுள்ளன. பபிஸ் தலைமையிலான ஆட்சிக்கு தாம் ஒரு போதும் ஆதரவு வழங்கப் போவதில்லை என்பதையும் அந்தக் கட்சிகள் தெரிவித்தும் உள்ளன.

பதவியை இழக்கும் பிரதமர் பெற் பியாலா தலைமையிலான ‘ஒற்றுமைக் கூட்டணி’ 23.36 விழுக்காடு வாக்குகளைப் பெற்றுத் தோல்வியைத் தழுவியுள்ளது. இக் கட்சியின் சார்பில் 52 உறுப்பினர்கள் நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகி உள்ளனர். இந்தக் கட்சி மொத்தமாக 1,313,346 வாக்குகளைப் பெற்றிருந்தது. கடந்த தேர்தலோடு ஒப்பிடுகையில் 19 உறுப்பினர்களை இந்தக் கட்சி இழந்துள்ளது.

ஒற்றுமைக் கூட்டணியின் ஆதரவுக் கட்சியான ‘மாநகர பிதாக்கள் மற்றும் சுயேட்சைகள் கட்சி’ 11.23 விழுக்காடு வாக்குகளைப் பெற்று 23 ஆசனங்களைக் கைப்பற்றி உள்ளது. 631,512 வாக்குகள் இந்தக் கட்சிக்குக் கிடைத்துள்ளன. கடந்த தேர்தலில் பெற்றிருந்த 11 ஆசனங்களை இந்தக் கட்சி பறிகொடுத்து உள்ளது.

‘செக் பைரைற்’ கட்சி 8.97 விழுக்காடு வாக்குகளைப் பெற்றுள்ளது. 504,537 வாக்குகளைப் பெற்ற இந்தக் கட்சியின் சார்பில் 18 உறுப்பினர்கள் தெரிவாகி உள்ளனர். கடந்த தேர்தலை விடவும் 14 ஆசனங்களை இந்தக் கட்சி அதிகமாகப் பெற்று சாதனை படைத்துள்ளது.

பொதுவுடமைச் சித்தாந்தத்தைப் பின்பற்றும் ஸ்ரசிலோ கட்சி 242,031 வாக்குகளைப் பெற்று ஏழாவது இடத்தில் உள்ள போதிலும் ஆசனங்கள் எதனையும் கைப்பற்றவில்லை. கடந்த தேர்தலிலிலும் இந்தக் கட்சி ஆசனங்கள் எதனையும் கைப்பற்றி இருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. செக் குடியரசு அரசியலமைப்பின் பிரகாரம் குறைந்தது 5 விழுக்காடு வாக்குகளைப் பெற்றால் மாத்திரமே பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தைப் பெற முடியும். இந்தக் கட்சி 4.3 விழுக்காடு வாக்குகளை மாத்திரமே பெற்ற நிலையில் பிரதிநிதித்துவத்தை இழந்தமை நோக்கத்தக்கது.

தேர்தல் முடிவில் பபிஸ் தலைமையிலான ஆம் கட்சியே ஆட்சியை அமைக்கும் தகுதி பெற்றுள்ள நிலையில் பிரதமராக பபிஸ் நியமிக்கப்படுவாரா என்ற கேள்வி தொக்கி நிற்கிறது. விவசாயப் பெரு நிறுவன உரிமையாளரான பபிஸ் மீது வரி ஏய்ப்பு வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது. தன் மீதான வழக்கு அரசியல் அடிப்படையில் சோடிக்கப்பட்ட ஒன்று என்பது அவரது தரப்பு வாதமாக உள்ளது. இந்நிலையில் ஜனாதிபதியாக உள்ள அவரது மேனாள் போட்டியாளரான பெற் பவல் அவரை பிரதமராக நியமிக்க முன்வருவாரா அல்லது நீதிமன்றத் தீர்ப்பு வரும் வரையில் அவரது நியமனத்தை இழுத்தடித்து மேலும் ஒரு அரசியல் குழப்பத்துக்கு நாட்டை இட்டுச் செல்வாரா என்பது அடுத்துவரும் ஓரிரு நாட்களில் தெரிந்துவிடும்.

அதேவேளை, கடந்த தேர்தலை விடவும் இம்முறை எதிர்க் கட்சிகள் அதிக வாக்குகளைப் பெற்றுள்ளமையை அவதானிக்க முடிகின்றது. எனவே, மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்பினாலும் முன்னைய ஆட்சியாளர்களின் பாதையில் பயணிக்கவே விரும்புகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் பொது முடிவுகளுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்ட தலைவர்களாக ஹங்கேரியின் ஜனாதிபதி விக்ரர் ஓர்பன் மற்றும் ஸ்லோவாக்கிய அதிபர் ரொபர்ட் பிக்கோ ஆகியோர் இருந்து வருகின்றனர். இந்த இருவருடனும் நெருக்கமான உறவுகளை பபிஸ் கொண்டுள்ளார். இந்நிலையில் இவர்களுடன் இணைந்து ஐரோப்பிய ஒன்றியத்துக்கு எதிராக இவரும் கொடி பிடிப்பாரா என்ற கேள்வி எழுகின்றது. உக்ரைன் போர் தொடர்பில் பபிஸ் மாறுபட்ட கருத்தைக் கொண்டுள்ள நிலையில் இத்தகைய கேள்விகள் எழுவது சகஜமானவை.

ஆனால், அரசியல் என்பது தேர்தல் வாக்குறுதிகளில் மாத்திரம் தங்கியிருப்பதில்லை என்பது உலகப் பொதுமையான விடயமாக உள்ள நிலையில் செக் குடியரசின் பிரதமராகப் பதவியேற்கலாம் என எதிர்பார்க்கப்படும் பபிஸ் எவ்வாறு நடந்து கொள்ளப் போகின்றார் என்பதை காலமே முடிவு செய்யும். ஐரோப்பிய ஒன்றியத்தின் அனைத்து முடிவுகளையும் கண்மூடித்தனமாக ஏற்றுக் கொள்ளும் நிலைப்பாட்டை அவர் எடுப்பாரா அல்லது விக்ரர் ஓர்பன் போன்றவர்களோடு கரங் கோர்ப்பாரா என்பது அடுத்துவரும் நாட்களில் தெரிந்துவிடும். எனினும், பபிஸ் தலைமையிலான கட்சி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட போதில் முதலாவது வாழ்த்தை விக்ரர் ஓர்பனிடம் இருந்து அவர் பெற்றிருந்ததை இயல்பான ஒரு நிகழ்வாகப் பார்க்க முடியாது.

சுவிசிலிருந்து சண் தவராஜா

Leave a Reply