ஜனாதிபதி தெரிவித்த பெருந்தோட்ட தொழிலார்களின் சம்பள உயர்வு குறித்து மனோ கணேசன் கேள்வி
இலங்கை
பெருந்தோட்ட தொழிலார்களின் அடிப்படை சம்பளம் உயர்வு குறித்து தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தற்போதைய அரசாங்கம் பெருந்தோட்ட தொழிலார்களின் அடிப்படை சம்பளத்தை உயர்த்துவது குறித்து வெளியிட்ட அறிவிவிப்பை தொடர்ந்து அவர் தனது x தளத்தில் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.
இன்று, அடிப்படை சம்பளம் ரூ. 1,350 ஆகும். கேள்வி இதுதான்: அரசு அடிப்படை சம்பளத்தை உயர்த்த உள்ளதா, அல்லது பிற மேலதிக கொடுப்பனவுகள் மூலம் ரூ. 1,750 வருகிறதா?
ஜனாதிபதியை முதலில் மூன்று அரச பெருந்தோட்ட நிறுவன தொழிலாளர்களின் சம்பளத்தை உயர்த்தி விட்டு, பின்னர் தனியார் கம்பனிகளுடன் பேச வேண்டும்.
அடிப்படை சம்பளம் மட்டுமே EPF பங்களிப்புக்கு உட்பட்டது. கொடுப்பனவுகள் அல்ல.
கம்பனிகளின் நிலையான நிலைப்பாடு எப்போதும் உறுதியானது. தொழிலாளர் அதிக கொழுந்து பறித்தால், கூடுதல் சம்பளம் வழங்க தயார். இது தான் அவர்களின் சூத்திரம். “அதிக கொழுந்து, அதிக சம்பளம்”. ஜனாதிபதியின் சூத்திரமும் இதுவென்றால், இதில் புதியதொன்றும் இல்லை.
தொழிலாளர்கள் அதிக கொழுந்து பறிக்க முடியாததற்கு காரணம் என்ன? ஏனெனில் தோட்டங்கள் பல தசாப்தங்களாக பராமரிக்க படவில்லை. ஆகவே, கொழுந்து குறைந்துள்ளது.
தமிழ் முற்போக்கு கூட்டணியின் நிலைப்பாடு, ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியுடனான எமது உடன்படிக்கையின்படி, தொழிலாளர்கள் பங்குதாரர்களாக மாற வேண்டும். இதை சிறு தோட்ட கூட்டுறவுகள் மூலம் சாத்தியமாக்கும்.
இதில் அரசு, தொழிலாளர்கள் மற்றும் நிறுவனங்கள் ஆகியோருக்கிடையில் கூட்டு ஒப்பந்தம் உருவாக வேண்டும். இதுதான் நிரந்தர தீர்வு.






















