நோபல் பரிசு பெறும் ஹங்கேரிய எழுத்தாளர் László-வின் எழுத்தும் பின்னணியும்
நான் பேரழிவை பற்றி எழுதுகிறேன் - லாஸ்லோ
71 வயதான ஹங்கேரிய எழுத்தாளர் லாஸ்லோ க்ராஸ்னஹோர்கை (László Krasznahorkai) 2025 நோபல் பரிசுக்கு தேர்வாகி உள்ளார்.
1954இல் ஹங்கேரியின் தென்கிழக்குப் பகுதியில், ரோமானியா எல்லைக்கு அருகில் உள்ள குயூலா (Gyula) என்ற சிறிய நகரில் லாஸ்லோ பிறந்தார்.
அபத்தவாதம், அதீதம், இருத்தலியல் ஆகிய பாங்குகளில் அமைந்த இவரின் படைப்புகள், பிரான்ஸ் காஃப்கா மற்றும் தாமஸ் பெர்ன்ஹார்ட் போன்றோரின் எழுத்து மரபில் இருந்து உருவானது எனலாம்.
சரிவின் விளிம்பில் இருக்கும் சமூகம் இவரின் படைப்புகளில் மீண்டும் மீண்டும் ஊடாகுகிறது. அதுவே இவருக்கு பேரழிவுவின் (Master of Apocalypse) ஆசான் என்ற பெயர் அமைய காரணமாகிறது.
தற்கால எழுத்தாளர்களில் மத்திய ஐரோப்பிய இலக்கிய மரபில் தனக்கென தனி இடத்தை லாஸ்லோ உருவாகியுள்ளார்.
லாஸ்லோவின் தனிச்சிறப்பு என்னவென்றால், முற்றுப்புள்ளிகள் இல்லாத மிக நீளமான, தொடர்ச்சியான வாக்கியங்களைப் பயன்படுத்துவதுதான்.
இது ஒரு கதையை ஒரே மூச்சில் சொல்வது போன்ற இடைவிடாத, தலைசுற்ற வைக்கும் உணர்வை வாசகருக்குக் கொடுக்கும்.
லாஸ்லோவின் முதல் நாவல் 'சாதன்டாங்கோ' (Satantango) 1985இல் வெளியாகி பெரும் வரவேற்ப்பை பெற்றது.
கம்யூனிசம் வீழ்ச்சியடையும் தருவாயில், ஹங்கேரிய கிராமப்புறத்தில் கைவிடப்பட்ட ஒரு கூட்டுப் பண்ணையில் வாழும் ஏழைகளின் அவநம்பிக்கை மற்றும் ஏமாற்றத்தை சித்தரிக்கும் இந்த பிரதி நம்பிக்கைத் துரோகம் மற்றும் சமூகச் சரிவைப் பற்றி பேசுகிறது.
இந்த நாவலை 1994 இல் பிரபல ஹங்கேரிய இயக்குனர் பேலா டார், 7 மணிநேரம் 30 நிமிடம் ஓடக்கூடிய முழு நீள திரைப்படமாக எடுத்தார்.
லாஸ்லோவின் 2வது நாவலான 'தி மெலன்கோலி ஆஃப் ரெசிஸ்டன்ஸ்' (The Melancholy of Resistance) 1989 இல் வெளிவந்தது. ஹங்கேரியில் கார்பாத்தியன் பள்ளத்தாக்கில் உள்ள ஒரு சிறிய நகருக்கு மர்மம் மற்றும் வினோதம் நிறைந்த சர்க்கஸ் குழு ஒன்று வருகிறது.
உயிரிழந்த ராட்சத திமிங்கலத்தின் சடலத்தை அவ்வூரில் சர்க்கஸ் குழு காட்சிக்கு வைக்கிறது. இதனை தொடர்ந்து அவ்வூரில் நிகழும் வன்முறை, அதிகார மாற்றத்திற்கான களம் அமைக்கபடுவதை விவரிக்கும் நாவல் ஒழுங்குக்கும் குழப்பத்திற்கும் இடையிலான போராட்டத்தை உவமைப்படுத்துகிறது.
இந்த நாவலும் இயக்குனர் பேலா டார் இயக்கத்தில் 'வெர்க்மீஸ்டர் ஹார்மோனீஸ்' என்ற பெயரில் 2000 ஆம் ஆண்டு திரைப்படமாக வெளிவந்தது.
1999 இல் வெளிவந்த லாஸ்லோவின் போரும் போரும் (War and war) நாவல், கோர் என்ற ஆவணக் காப்பாளரின் கதையை விவரிக்கிறது.
தனது வாழ்வின் இறுதிக் கட்டத்தில் இருக்கும் கோர், தான் கண்டறிந்த ஒரு பண்டைய காவியத்தை உலகறியச் செய்ய புடாபெஸ்ட்டில் இருந்து நியூயார்க்கிற்குப் பயணம் மேற்கொள்வதாக கதை நகர்கிறது. இந்த படைப்பு லாஸ்லோவின் முற்றுப்புள்ளி இல்லாத நடைக்கு சிறந்த உதாரணமாக முன்வைக்கப்படுகிறது.
நீண்ட இடைவெளிக்கு பின் 2016 இல் 'பாரன் வென்கைமின் ஹோம் கமிங்' (Baron Wenckheim's Homecoming) என்ற நாவலை லாஸ்லோ வெளியிடுகிறார்.
ரஷிய இலக்கிய மேதை தாஸ்தோயெவ்ஸ்கியின் கதை பாணியை பின்பற்றி எழுதப்பட்ட இந்நாவல் சூதாட்டத்திற்கு அடிமையான ஒருவன் தன் குழந்தைப் பருவ காதலை தேடி அர்ஜென்டினாவிலிருந்து தாய்நாட்டிற்கு திரும்புவதை நகைச்சுவை மற்றும் சோகத்துடன் விவரிக்கிறது.
கடைசியாக லாஸ்லோவின் படைப்பாக 2021இல் 'ஹெர்ஷ்ட் 07769' (Herscht 07769) என்று நாவல் வெளிவந்துள்ளது. வழக்கமாக ஹங்கேரியை தனது கதைகளின் களமாக வரிக்கும் லாஸ்லோ இந்த நாவலை ஜெர்மனியின் துரிங்கன் மாகாணத்தில் உள்ள ஒரு சிறிய நகரத்தை மையமாக வைத்து எழுதியுள்ளார்.
அந்நகரில் நிகழும் கொலைகள், வன்முறை அதனால் சமகாலத்தில் நிலவும் அமைதியின்மை ஆகியவற்றை பின்னணியாக கொண்டு இக்கதை நகர்கிறது. வன்முறையும் அழகும் ஒன்றிணையும் புள்ளியாக இந்த படைப்பை விமர்சகர்கள் கருதுகின்றனர்.
1990கள், மற்றும் 2000 த்தின் முற்பகுதியில் சீனா மற்றும் ஜப்பானுக்கான தனது பயணங்களின் தாக்கம் குறித்தும் லாஸ்லோ எழுதியுள்ளார்.
பரவலாக நாவலாசிரியராக கருதப்படும் லாஸ்லோ 2008இல் 'செய்போ தேர் பிலோ' (Seiobo There Below) என்ற சிறுகதை தொகுப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
மொத்தத்தில் லாஸ்லோ தனிமனித மற்றும் சமூகத்தின் வீழ்ச்சி குறித்தும் நிலையின்மையால் சபிக்கப்பட்ட அல்லது ஆசீர்வதிக்கப்பட்ட மனித இருப்பு குறித்தும் தனது படைப்புகளில் தொடர்ந்து பேசிய வண்ணம் உள்ளார் எனலாம். இதையே "நான் பேரழிவைப் பற்றி எழுதுகிறேன்" என்ற லாஸ்லோவின் கூற்றும் தெள்ளிதின் விளக்குகிறது.
பேரழிவு குறித்து நேர்காணல் ஒன்றில் லாஸ்லோ கூறியவை பின்வருமாறு, "பேரழிவு என்பது ஒரே ஒரு நிகழ்வு அல்ல, அது தொடர்ச்சியான ஒரு செயல்முறை ஆகும். அது நீண்ட காலமாக நடந்து கொண்டிருக்கிறது, இன்னும் நீண்ட காலத்திற்குத் தொடரும். பேரழிவு என்பது தொடர்ந்து நிகழ்ந்துகொண்டிருக்கும் ஒரு தீர்ப்பு"





















