Dawn Pictures தயாரிப்பில் மீண்டும் தனுஷ் - விரைவில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு
சினிமா
தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக உள்ள தனுஷ் தற்போது இயக்கி நடித்துள்ள படம் 'இட்லி கடை. இப்படம் கடந்த 1-ந்தேதி வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து தனுஷ் அடுத்து நடிக்க உள்ள படம் மீதான எதிர்பார்ப்பு நிலவியது.
இந்த நிலையில், 'லப்பர் பந்து' படத்தின் இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் தனுஷ் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், டான் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் மீண்டும் இணைந்துள்ள தனுஷ்- அனிருத் காம்போ ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சமீபத்தில் வெளியான தனுஷின் 'இட்லி கடை' மற்றும் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் 'பராசக்தி' படத்தையும் டான் பிக்சர்ஸ் தயாரித்து உள்ளது. தற்போது மீண்டும் தனுஷின் படத்தை டான் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் அனிருத். இவர் தனுஷ் நடித்து வெளியான '3' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். இதனை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் வெளியான 'வேலையில்லா பட்டதாரி', 'மாரி', 'தங்கமகன்', 'திருச்சிற்றம்பலம்' போன்ற படங்களுக்கு அனிருத் இசையமைத்த பாடல்களால் இருவரின் கூட்டணிக்காகவே ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. 'திருச்சிற்றம்பலம்' படத்திற்கு பிறகு இவர்கள் கூட்டணி எப்போது அமையும் என்று எதிர்பார்த்துக் காத்துக்கொண்டு இருந்த ரசிகர்களுக்கு தற்போது கிடைத்துள்ள இன்ப செய்தியால் உற்சாக மிகுதியில் உள்ளனர்.
























