பான் இந்தியா கான்செப்ட்டில் நம்பிக்கை இல்லை- விஷ்ணு விஷால்
சினிமா
தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிப்பதில் புகழ் பெற்றவர் விஷ்ணு விஷால். கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து இவர் நடித்த பல படங்கள் வெற்றி பெற்றுள்ளன.
இந்த நிலையில், கட்டா குஸ்தி திரைப்படத்திற்கு பிறகு விஷ்ணு விஷால் கதாநாயகனாக நடித்து வெளியாக இருக்கும் திரைப்படம் தான் ஆர்யன்.
ராட்சசன் வரிசையில், ஹாரர் திரில்லர் கதையம்சம் கொண்டு உருவாகி இருக்கும் ஆர்யன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஆர்யன் படம் குறித்து விஷ்ணு விஷால் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
கொரோனா காலக்கட்டத்தில் தான் ஆர்யன் படத்தின் கதையை கேட்டேன். கதையை கேட்டதும், இதில் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டேன். ராட்சசன் படத்திற்கு பிறகு திரில்லர் படத்தில் நடிக்க வேண்டும், ஆனால் அந்தப் படம் வித்தியாசமாகவும் இருக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.
அதற்கு ஏற்றார்போல் இந்தப்படம் அமைந்துள்ளது. நிச்சயமாக ராட்சசன் போன்று இருக்காது. ஆனால், ரசிகர்கள் எதிர்பார்க்காத விஷயம் இந்தப் படத்தில் இருக்கிறது. கட்டா குஸ்தி திரைப்படம் தொடங்குவதற்கு முன்பே இந்தப் படத்திற்காக 15 நாட்கள் படப்பிடிப்பு நடத்திவிட்டோம். எனினும், பல்வேறு காரணங்களால் இதன் படப்பிடிப்பு தாமதமானது.
வெப் சீரிஸ் தொடர்பான பணிகளுக்காக நானும் ஆர்யன் படத்தின் இயக்குநர் பிரவீன் மும்பை சென்றிருந்தோம். அப்போது நடிகர் அமீர் கானை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த சமயத்தில் அவர் பொதுவாக பேசும் போது, இந்தப் படத்தின் கதையை கேட்பதாக சொன்னார்.
அதன்படி ஒருநாள் இரவு 10 மணிக்கு கதை சொல்ல ஆரம்பித்து, மறுநாள் காலை 6 மணி வரை ஆர்யன் படம் மட்டுமின்றி பொதுவில் சினிமா தொடர்பான விஷயங்கள் பற்றி பேசிக் கொண்டிருந்தோம். கதையை கேட்ட அமீர்கான் இந்தப் படத்தின் இந்தி பதிப்பில் தான், வில்லனாக நடிப்பதாக கூறினார். எனினும், இந்தப் படத்தின் இந்தி பதிப்பு தற்போது உருவாகும் சூழல் ஏற்படாமல் போய்விட்டது.
அமீர்கான் நடிப்பதாக தெரிவித்த கதாபாத்திரத்தில் தற்போது செல்வராகவன் நடித்திருக்கிறார். நாங்கள் இந்தப் படத்தை தொடங்கும் போதே, வில்லன் கதாபாத்திரத்தில் செல்வராகவன் நடிக்க வேண்டும் என்று நினைத்திருந்தோம்.
எனக்கு பான் இந்தியா கான்செப்ட்டில் நம்பிக்கை இல்லை. தற்போது பான் இந்தியா படங்கள் கடவுள் சார்ந்ததாகவும், அதீத கமர்ஷியலாகவும் இருக்கின்றன. இந்தப் படம் முற்றிலும் வேறானது. இந்தப் படம் அதிக மொழிகளில் வெளியாகி, சில மொழிகளில் மட்டும் நல்ல பெயர் எடுத்தால் போதும் என்று நான் நினைக்கவில்லை. குறைந்த அளவில் இரு மொழிகளில் வெளியானால் கூட எனக்கு அதன் வரவேற்பு மகிழ்ச்சியை கொடுத்தாலே போதும்.
இவ்வாறு அவர் கூறினார்.























