இலங்கை ஐக்கிய கிராம உத்தியோகத்தர் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை
இலங்கை
எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் இருந்து கொடுப்பனவுகள் கிடைக்காவிடின் , இலங்கை ஐக்கிய கிராம உத்தியோகத்தர் சங்கம் நாடளாவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளது.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துரைத்த ஐக்கிய கிராம உத்தியோகத்தர் சங்கத்தின் இணைத்தலைவர் நந்தன ரணசிங்க இதனை தெரிவித்தார்.
இதேவேளை, கடந்த வரவு செலவுத் திட்ட விவாதத்தில், தமது சேவைகள் யாப்பு திருத்தங்களுடன் நிறைவேற்றப்படும் என்றும் சேவை யாப்பு மே 1 ஆம் திகதிக்குள் வர்த்தமானியில் வெளியிடப்படும் எனவும் அமைச்சர் கூறியிருந்த நிலையில் இன்று, அது ஒரு பொய்யான வாக்குறுதியாக மாறிவிட்டது என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
இந்நிலையில், கிராம உத்தியோகத்தர் கூட்டணியின் திருத்தங்களுடன் இந்த சேவை யாப்பை உடனடியாக வர்த்தமானியில் வெளியிட்டு அமுல்படுத்துமாறு இந்த அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்வதக்கவும் இல்லையெனில், இந்த அரசாங்கத்திற்கு எதிராக நாங்கள் வீதிகளில் இறங்க வேண்டியிருக்கும் எனவும் சங்கத்தின் இணைத்தலைவர் தெரிவித்தார்.
இதேவேளை, கடந்த வரவுசெலவு திட்டத்தில் 20 லிட்டர் எரிபொருள் ஒதுக்கீடு குறைக்கப்பட்ட நிலையில்
ஒன்றிணைந்த கூட்டணியாக வரவிருக்கும் வரவுசெலவு திட்டத்தில் இந்த ஒதுக்கீடுகள் தமக்கு கிடைக்காவிட்டால், நாடளாவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை ஐக்கிய கிராம உத்தியோகத்தர் சங்கத்தின் இணைத்தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.























