அரியாலையில் குப்பை மேடு அமைக்கும் திட்டத்தை எதிர்த்து மக்கள் ஆர்ப்பாட்டம்
இலங்கை
யாழ்ப்பாணம் அரியாலையில் குப்பை மேடு அமைக்கும் நல்லூர் பிரதேச சபையின் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றைய தினம் (08) அரியாலை கிழக்கு பகுதியில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
இதேவேளை, நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் போராட்ட களத்திற்கு வரவேண்டும் எனக் கோரி வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் அப்பகுதியில் போக்குவரத்து தடைப்பட்ட நிலையில் பின்னர், நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் மயூரன் போராட்ட இடத்திற்கு வருகைதந்தார்.
இதன்போது மக்கள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியதுடன் குறித்த பகுதியில் இனி குப்பை கொட்டுவதற்கு வாகனங்கள் வருகை தந்தால் , அவற்றுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு நாங்கள் பொறுப்பல்ல எனவும் எச்சரிக்கை விடுத்தனர்.
பின்னர், குறித்த பிரச்சினை தொடர்பில் தவிசாளரிடம் மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, போராட்டக்காரர்கள் பேரணியாகச் சென்று ஆளுநர் செயலகத்தில் மற்றொரு மகஜரையும் கையளித்தனர்.
இதேவேளை, நல்லூர் பிரதேச சபை, ஊர் மக்களுடன் எவ்வித கலந்துரையாடலும் மேற்கொள்ளலாமல் , சுற்றுச்சூழலை மாசுபடுத்தக்கூடிய குப்பைகளை தமது ஊரில் கொட்டும் திட்டத்தை ஆரம்பித்திருப்பது, தம்மால் ஏற்றுக்கொள்ள முடியாத அநீதியாகும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்திருந்தனர்.
‘இயற்கைப் பசளை உற்பத்தி’ என்ற பெயரில், வகைப்படுத்தப்படாத, மக்காத குப்பைகளை எமது ஊரில் கொட்டி, எமது ஊரை குப்பை மேடாக மாற்றும் முயற்சியை நல்லூர் பிரதேச சபை உடனடியாகக் கைவிட வேண்டும் எனவும் இதன்போது போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கோரிக்கை விடுத்தனர்.























