ராணுவத் தளபதியிடமிருந்து மோகன்லாலுக்கு கிடைத்த கௌரவம்
சினிமா
40 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் கோலோச்சி வரும் மோகன்லால் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் 400 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
கலைத்துறைக்கு அவர் செய்த சேவைகளுக்காக , 2001 பத்மஸ்ரீ விருது, 2019 இல் பத்ம பூஷண் விருது, 2025-க்கான தாதாசாகேப் பால்கே விருது ஆகியவற்றை பெற்றுள்ளார்.
அதேநேரம் இந்திய பிராந்திய ராணுவத்தில் கௌரவ லெப்டினன்ட் கர்னல் பதவியையும் மோகன்லால் வகிக்கிறார். அவருக்கு இந்த கௌரவம் மே 2009 இல் வழங்கப்பட்டது. ஆகஸ்ட் 2024 இல் கேரளாவின் வயநாடு நிலச்சரிவின் போது கர்னலாக அவர் மேற்கொண்ட நிவாரண பணிகள் பாராட்டப்பட்டது.
இந்நிலையில் நேற்று புதுடெல்லியில் ராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதியை சந்தித்து மோகன்லால் பாராட்டு பெற்றார். 7 தளபதிகள் முன்னிலையில் மோகன்லாலுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி உபேந்திர திவேதி கௌரவித்தார்.
இந்த சந்திப்புக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய மோகன்லால்,"ராணுவத் தளபதியிடம் இருந்து பாராட்டு பெறுவது ஒரு பெரிய அங்கீகாரம் மற்றும் மரியாதை.
இது ஒரு நல்ல சந்திப்பு. தாதாசாகேப் பால்கே விருது இதற்கு ஒரு காரணம். நான் 16 ஆண்டுகளாக ராணுவத்தில் ஒரு பகுதியாக இருக்கிறேன்.புதிய தலைமுறையை ராணுவத்திற்குள் கொண்டு வர முயற்சிப்பேன்" என்று கூறினார்.






















