காசா போர் தொடங்கி 2 ஆண்டுகள் நிறைவு - எகிப்தில் 2வது நாளாக அமைதிப் பேச்சுவார்த்தை
2023, அக்டோபர் 7 அன்று இஸ்ரேலுக்குள் புகுந்து ஹமாஸ் நடத்திய தாக்குதலில் சுமார் 1,200 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும் பலர் பணய கைதிகளாக பிடித்துச் செல்லபட்டனர்.
இதன்பிறகு காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் பதிலடித் தாக்குதல்களில் இதுவரை 67,160 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். அவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவர்.
ஹமாஸ் தாக்குதல் தொடுத்து இன்றுடன் 2 இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் இஸ்ரேலில் ஹமாஸ் தாக்குதலில் உயிரழந்தவர்கள், பணய கைதிகளாக உயிரிழந்தர்வர்களுக்கு நினைவேந்தல் நடைபெற்றது.
இதற்கிடையே அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முன்மொழிந்த அமைதித் திட்டத்தை ஏற்று போரை முழுவதுமாக நிறுத்துவது குறித்துஇஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்புகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தை எகிப்தின் ஷர்ம் எல்-ஷேக் ரிசார்ட் நகரில் இன்று (அக்டோபர் 7) இரண்டாவது நாளாகத் தொடர்ந்தது.
நேற்று (திங்கட்கிழமை) முதற்கட்டமாக நடந்த நான்கு மணி நேரப் பேச்சுவார்த்தையில், பிணைக்கைதிகள் விடுதலை மற்றும் போர் நிறுத்தம் ஆகிய முதல் கட்ட நிபந்தனைகளில் பெரும்பாலானவற்றை இரு தரப்பினரும் ஏற்றுக்கொண்டதாக எகிப்து அதிகாரிகள் தெரிவித்தனர்.
கத்தார் மற்றும் எகிப்து நாடுகளின் மத்தியஸ்தர்கள், இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் தூதுக் குழுவினருடன் தனித்தனியாகப் பேசினர்.
அமெரிக்கத் தூதர் ஸ்டீவ் விட்கோப் மற்றும் டிரம்பின் மருமகன் ஜாரெட் குஷ்னர் ஆகியோர் பேச்சுவார்த்தைகளில் பங்கேற்று டிரம்ப்புக்கு நிலவரங்களைத் தெரிவித்தனர்.
இந்த பேச்சுவார்த்தையை விரைவாக முடிக்க வேண்டியது அவசியம் என்று வெள்ளை மாளிகை வலியுறுத்தியுள்ளது.
காசா போரை முடிவுக்குக் கொண்டு வந்து, மத்திய கிழக்கில் நீடித்த அமைதியை ஏற்படுத்துவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் என அதிபர் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்தார்.
ஹமாஸ் ஆயுதங்களைக் கைவிட வேண்டும் மற்றும் காசாவின் எதிர்கால நிர்வாகம் எப்படி இருக்கும் என்பன போன்ற முக்கிய கோரிக்கைகளில் இன்னமும் தெளிவின்மை நீடிக்கிறது.
ஹமாஸ் ஆயுதங்களைக் களைந்த பிறகு இஸ்ரேல் தனது படைகளை காசாவிலிருந்து திரும்பப் பெறும். பின்னர் காசாவுக்கு ஒரு சர்வதேச பாதுகாப்புப் படை அனுப்பப்பட்டு, டிரம்ப் மற்றும் இங்கிலாந்து முன்னாள் பிரதமர் டோனி பிளேயர் ஆகியோர் மேற்பார்வையிடும் ஒரு சர்வதேச நிர்வாகத்தின் கீழ் காசா இருக்கும்.
ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், இந்தப் போருக்கு முற்றுப்புள்ளி வைக்க டிரம்ப் முன்மொழிவை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.
பசியால் வாடும் காசா மக்களுக்கு உடனடி நிவாரண உதவிகள் அனுப்ப ஐ.நா. தயாராக உள்ளது என்று அவர் தெரிவித்தார்.






















