• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ருமேனிய ஜனாதிபதித் தேர்தல் - ரஸ்யா எதிர் ஐரோப்பா?

கிழக்கு ஐரோப்பிய நாடான ருமேனியாவில் நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலின் முதல் சுற்றில் ஜோர்ஜ் சிமியோன் முன்னிலை பெற்றுள்ளார். மிகவும் பரபரப்பான சூழலில் நடைபெற்று முடிந்த இந்தத் தேர்தலில் அவர் 40.96 விழுக்காடு வாக்குகளைப் பெற்றுள்ளார். இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ள தலைநகர் புக்காரெஸ்ட்டின் மாநகர பிதாவான நிக்குசோர் டான் 20.99 விழுக்காடு வாக்குகளைப் பெற்றுள்ளார். இந்நிலையில், இம் மாதம் 18ஆம் திகதி நடைபெறவுள்ள இரண்டாவது சுற்றுத் தேர்தலில் ஜோர்ஜ் சிமியோன் இலகுவான வெற்றியைப் பெறுவார் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்தத் தேர்தலில் 53.21 விழுக்காடு வாக்களார்கள் தங்கள் வாக்கை அளித்துள்ளார்கள். இது கடந்த தேர்தலை விடவும் 0.65 விழுக்காடு அதிகமாகும். ருமேனியத் தேர்தலில் அந்த நாட்டில் வாழும் மக்கள் மாத்திரமன்றி புலம்பெயர்ந்து வாழும் மக்களும் வாக்களிப்பது வழக்கம். புலம்பெயர்ந்த ருமேனியர்களின் எண்ணிக்கை 4 முதல் 12 மில்லியன் வரை என்கிறது புள்ளி விபரங்கள். 19 மில்லியன் மக்கள் தெகையைக் கொண்ட அந்த நாட்டில் அரைவாசிக்கும் அதிகமானோர் புலம்பெயர்ந்து உள்ளதை அவதானிக்க முடியும். வறுமை, வேலைவாய்ப்பின்மை, அரசியல் நெருக்கடி என்பவை காரணமாகவே அதிக மக்கள் அந்த நாட்டைவிட்டு இடம்பெயர நேரிட்டது. இத்தாலி நாட்டில் மாத்திரம் ஒரு மில்லியனுக்கும் அதிகமான ருமேனியர்கள் வாழ்வதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இது தவிர யேர்மனி, ஸ்பெயின், பிரித்தானியா, அமெரிக்கா, ஹங்கேரி, பிரான்ஸ், கனடா ஆகிய நாடுகளிலும் புலம்பெயர்ந்த ருமேனியர்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். நடைபெற்று முடிந்த தேர்தலில் இவர்களுள் பெரும்பாலானவர்கள் சிமியோனுக்கே வாக்களித்து உள்ளமை குறிப்பிடத்தக்கது. கிடைத்துள்ள தகவல்களின்படி ஸ்பெயினில் வாழும் 73 வீதமானோரும் பிரித்தானியாவில் வாழும் 65 வீதமான புலம்பெயர் ருமேனியர்களும் சிமியோனுக்கே தங்கள் வாக்கை அளித்ததாகத் தெரிகின்றது.

இம்முறை தேர்தலில் வாக்களிக்க 17,988,740 பேர் தகுதி பெற்றிருந்தனர். இவர்களுள் 9,571,740 பேர் மாத்திரமே வாக்களித்திருந்தனர். அதில் 3,862,761 வாக்குகளை சிமியோன் பெற்றிருந்தார். சுயாதீன வேட்பாளரான நிக்குசோர் டான் 1,979,767 வாக்குகளைப் பெற்றிருந்தார். 11 வேட்பாளர்கள் போட்டியிட்டிருந்த இந்தத் தேர்தலில் மற்றொரு சுயாதீன வேட்பாளரான மேனாள் பதில் ஜனாதிபதி கிரின் அன்ரெனெஸ்கு 20.07 விழுக்காடு வாக்குகளைப் பெற்று மூன்றாம் இடத்தைப் பெற்றார்.

கடந்த வருடம் நவம்பர் மாதம் 24ஆம் திகதி ருமேனியாவில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலும் அதனைத் தொடர்ந்து நடைபெற்ற சம்பவங்களும் உலகம் முழுவதிலும் உள்ள ஊடகங்களின் தலைப்புச் செய்தியாக இடம் பிடித்திருந்தது. இந்தத் தேர்தலில் எதிர்பாராத விதமாக கலின் ஜோர்ஜெஸ்கு அதிக வாக்குகளைப் பெற்று முதலிடம் பெற்றிருந்தார். இரண்டாவது சுற்றுத் தேர்தல் நடைபெறுவதற்கு முன்பதாக அவர் ரஸ்ய ஆதரவாளர் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டதுடன் இரண்டாவது சுற்றுத் தேர்தலும் ரத்துச் செய்யப்பட்டிருந்தது. அத்தோடு வருங்காலத் தேர்தல்களில் அவர் போட்டியிடுவதற்கான தடையும் விதிக்கப்பட்டிருந்தது. உலகளாவிய கண்டனத்தைச் சந்தித்த இந்தச் சம்பவத்தின் பின்னர் மே மாதம் 4ஆம் திகதி நடைபெற்ற தேர்தலை உலகமே உன்னிப்பாக அவதானித்தது.

தற்போது முதலிடத்தில் உள்ள 38 வயதான சிமியோன் ருமேனியர் ஒற்றுமைக்கான கூட்டமைப்புக் கட்சியின் தவைராக உள்ளார். கலின் ஜோர்ஜெஸ்கு அவர்களின் தீவிர ஆதரவாளரான இவர் வாக்களிப்பு தினத்தன்று அவரையும் கூடவை அழைத்து வந்திருந்தார். வாக்குச் சாவடியில் இருவரும் ஒருவர் பின் ஒருவராக நின்ற நிழற்படம் பல ஊடகங்களில் இடம்பிடித்திருந்தது. கலின் ஜோர்ஜெஸ்கு அவர்களின் முதல் சுற்று வெற்றி வறிதாக்கப்பட்டமை, மீண்டும் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு அவருக்கு மறுக்கப்பட்டமை போன்ற செயல்கள் ஒரு சதி நடவடிக்கை எனப் பகிரங்கமாகவே குற்றஞ் சாட்டியுள்ள சிமியோன் தனது ஆட்சியில் கலின் ஜோர்ஜெஸ்கு அவர்களுக்கு பிரதமர் பதவி வழங்கப்படும் எனவும் தெரிவித்திருந்தார்.

2024 நவம்பரில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் சிமியோனும் போட்டியிட்டு நான்காவது இடத்தைப் பிடித்திருந்தார். இரண்டாவது சுற்றுத் தேர்தலில் தனது ஆதரவாளர்களை கலின் ஜோர்ஜெஸ்குவுக்கு வாக்களிக்குமாறும் கேட்டிருந்தார். அயல்நாடான உக்ரைனுக்கு இராணுவ உதவிகள் வழங்குவதை இருவரும் எதிர்த்து வருகின்றனர். அது போன்று உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர ரஸ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு இணக்கப்பாட்டுக்கு வரவேண்டும் என்ற கொள்கையை இருவரும் கொண்டுள்ளனர்.
 
நேட்டோ அங்கத்துவ நாடான ருமேனியாவில் அமெரிக்காவின் படைத் தளங்கள் உள்ளன. அது மாத்திரமன்றி உக்ரைனுக்குச் செல்லும் பெரும்பாலான படைத் துறை உதவிகளும் ருமேனியா ஊடாகவே செல்கின்றன. மேலும், உக்ரைன் தானிய விளைபொருட்கள் ருமேனியத் துறைமுகம் ஊடாகவே ஏற்றுமதி செய்யப்பட்டும் வருகின்றன. உக்ரைன் போர் தொடர்பில் சிமியோன் கொண்டுள்ள நிலைப்பாடு காரணமாக அவர் உக்ரைன் நாட்டுக்கு வருவதற்கான தடையை அந்த நாடு விதித்துள்ளது. இந்நிலையில், சிமியோன் ஜனாதிபதியாகத் தெரிவாகும் பட்சத்தில் அது உக்ரைனுக்குப் பாரிய நெருக்கடியாக அமையும் என நிச்சயம் நம்பலாம்.

சரித்திரத் துறைப் பட்டதாரியான சிமியோன், ருமேனிய இனத்தவர் அனைவரும் இணைந்த ‘அகண்ட ருமேனியா’ ஒன்று அமைய வேண்டும் என்ற விருப்புக் கொண்டவர். இந்த நோக்கத்தோடு அவர் கடந்த காலங்களில் பல முன்னெடுப்புக்களை மேற்கொண்டார். அயல் நாடான மோல்டோவா ருமேனியாவுடன் இணைக்கப்பட வேண்டும், முன்னைய காலத்தில் அது அவ்வாறே இருந்தது என்பது அவரது நிலைப்பாடு. அந்த நோக்கத்தோடு அவர் ருமேனியாவில் இருந்து மோல்டோவா வரை ஒரு நெடும் பயணத்தைக் கூட ஏற்பாடு செய்து நடத்தியவர். இதனால் மோல்டாவா வருவதற்கு அந்த நாடு அவருக்குத் தடை விதித்துள்ளது. அதுபோல் உக்ரைனில் உள்ள ருமேனிய மொழி பேசும் பிரதேசங்களும் ருமேனியாவுடன் இணைக்கப்பட வேண்டும் என்பதுவும் அவரது அவா.

வெளிப்படையாகப் பேசும் சிமியோன் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் ரசிகர். அவரது வெற்றியை சிமியோன் வெகுவாக வரவேற்றுக் கொண்டாடினார். ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குள் கிழக்கு ஐரோப்பிய நாடுகள் தனியொரு கூட்டாக இயங்க வேண்டும் என்பதுவும் அவரது பெருவிருப்புகளுள் ஒன்று.

இரண்டாவது சுற்றுத் தேர்தலுக்கான பரப்புரைகள் தற்போது மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்தப் பரப்புரைகள் பெரும்பாலும் ரஸ்ய ஆதரவு - மேற்குலக ஆதரவு என்ற எதிரும் புதிருமான கருத்தியல் நிலைப்பாட்டிலேயே நடைபெற்று வருவதை அவதானிக்க முடிகின்றது. உக்ரைன் போருக்கு எதிரான மனோநிலையைக் கொண்ட சிமியோன் ரஸ்யாவுடன் பேச்சுக்கள் நடத்தப்பட்டு இணக்கப்பாட்டுக்கு வரவேண்டும் என்ற மனோநிலையைக் கொண்டவராக இருப்பதால் அவர் ரஸ்ய ஆதரவாளர் என்று வகைப்படுத்தப்பட்டு உள்ளார்.

மறுபுறம், உக்ரைன் போர் தொடர்பில் ருமேனியா கடைப்பிடித்துவரும் தற்போதைய நிலைப்பாடு தொடர வேண்டும் என விரும்பும் நிக்குசோர் டான் மேற்குலக குறிப்பாக மேற்கு ஐரோப்பிய நாடுகளின் ஆதரவாளர் எனக் கருதப்படுகின்றார்.

பொருளாதாரக் கொள்கைகள, சிக்கன நடவடிக்கைகள் என்பவை தொடர்பில் இரண்டு வேட்பாளர்களும் பெரும்பாலும் ஒருமித்த கருத்தைக் கொண்டிருந்தாலும், இவர்களது ஆதரவு நிலைப்பாடே வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் என்பது தெளிவாகத் தெரிகின்றது. அதனைத் தெரிந்து கொள்ள நாம் எதிர்வரும் 18ஆம் திகதி வரை காத்திருக்க வேண்டியது அவசியமானது.

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான சமாதான நடவடிக்கைகள் வேகமெடுத்துள்ள இன்றைய சூழலில் ருமேனியாவின் தேர்தல் முடிவுகள் அதிக கவனம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply