
தேங்காய் பன்னுக்காக அலைந்த எனக்கு இன்று சிவப்பு கம்பள வரவேற்பு - கண் கலங்கி பேசிய நடிகர் சூரி
சினிமா
திருப்பூர் முதலிபாளையம் பகுதியில் உள்ள நிப்ட் டீ கல்லூரியில் மாமன் திரைப்பட முன்னோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் படத்தின் நாயகன் சூரி, கதாநாயகி ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கல்லூரி சார்பில் ஆடை அலங்கார அணி வகுப்பு நடைபெற்றது. அதில் கல்லூரி மாணவ மாணவிகள் தாங்கள் வடிவமைத்த ஆடைகளை அணிந்து ஒய்யாரமாக நடந்து பார்வையாளர்களை கவர்ந்தனர்.
இதன் பின்னர் நடிகர் சூரி மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் இணைந்து அதே மேடையில் கேட் வாக் செய்தனர். இதன் பின்னர் நடிகர் சூரி பேசுகையில், இதே திருப்பூரில் 14 வயதில் பனியன் தயாரிக்கும் ஆலையில் வேலை பார்த்தேன்.அப்போது ஒரு தேங்காய் பன்னுக்கு அலைந்து திரிந்தேன். திருப்பூரில் அனைத்து வீதிகளிலும் நடந்து திரிந்தேன். இன்று எனக்கு இந்த கல்லூரியில் சிவப்பு கம்பள வரவேற்பு அளித்துள்ளனர் என கண்கலங்கி பேசினார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், தொழிலாளர்களால் உயர்ந்த ஊர் என்று சொன்னால் அது திருப்பூர் தான்.இங்கு தான் நேற்று தொழிலாளியாக இருந்த ஒருவர் இன்று முதலாளி ஆக மாறியுள்ளார். இந்திய அளவில் ஏற்றுமதி தொழிலில் தமிழகம் ஏற்றம் அடைய, திருப்பூர் ஒரு முக்கிய காரணமாக உள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது.
உலக நாடுகளில் உள்ள பலரும் இந்த ஊரில் தயாரித்த உடைகளை அணிந்து கொள்கின்றனர் என்பதே பெருமை தான். எனது வளர்ச்சியிலும் இந்த திருப்பூர் உள்ளதை நான் மறுக்க முடியாது. இங்கு தான் எனது வாழ்க்கை துவங்கியது. இங்கிருந்து தான் நான் பல இடங்கள் சென்று இன்று ஒரு இடம் பிடித்துள்ளேன். இங்கு எனது படத்தின் 'பிரி' ரிலீஸ் விழா நடக்கிறது என்றால், இதற்கு மேல் வேறு எந்த பெருமையும் கிடையாது.எனது வளர்ச்சிக்கு காரணம் உழைப்பு , நம்பிக்கை . நான் வேகமாக வளரவில்லை. கடுமையாக உழைத்து மேலே வந்துள்ளேன். தரைக்கு மேல் இருந்து வளரவில்லை. தரைக்கு கீழே இருந்து வளர்ந்துள்ளேன்." இவ்வாறு அவர் பேசினார்.