• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஜப்பானில் பிரேசிலிய பெண் மர்ம மரணம்- இலங்கையர் கைது

இலங்கை

ஜப்பானின் சிபா மாகாணத்தின் நரிட்டா விமான நிலையத்திற்கு அருகில் தீப்பிடித்ததாகக் கூறப்படும் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் பிரேசிலிய பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்தின் பின்னணியில் 31 வயதுடைய இலங்கையர் ஒருவரை ஜப்பானிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.

உயிரிழந்தவர் மொழியியலில் முதுகலைப் பட்டம் பெற்ற ஆராய்ச்சியாளரான 30 வயதான அமண்டா போர்கஸ் டா சில்வா (Amanda Borges da Silva) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவர் ஆசியா முழுவதும் பயணம் செய்ய மார்ச் மாதம் தனது சொந்த நாட்டை விட்டு வெளியேறினார்.

மோட்டார் ஸ்போர்ட்ஸின் மிகப்பெரிய ரசிகரான அவர், ஏப்ரல் மாத தொடக்கத்தில் F1 கிராண்ட் பிரிக்ஸ் பந்தயத்தை பார்வையிடுவதற்காக ஜப்பானை வந்தடைந்ததாக அந் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இன்ஸ்டாகிராமில் டா சில்வா, தனது ஜப்பான் பயணத்தின் படங்களை பதிவேற்றினார்.

அதில் அவர் அந்த நாட்டை எவ்வளவு ரசிக்கிறார் என்பதை தனது பின்தொடர்பவர்களுக்குத் தெரிவித்தார்.

அவரது இறுதி புதுப்பிப்பு ஏப்ரல் 25 அன்று வெளியிடப்பட்டது.

இந்த நிலையில், மே 1 ஆம் திகதி காலை 9 மணியளவில் நரிட்டா நகரின் ஹொன்சரிசுகாவில் உள்ள இரண்டு மாடி அடுக்குமாடி குடியிருப்பில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.

அவரது நண்பர் ஜேம்ஸ் பெர்னாண்டஸின் கூற்றுப்படி, அவர் அன்று மாலை ஜப்பானை விட்டு வெளியேற திட்டமிடப்பட்டிருந்தார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

போர்கஸ் டா சில்வாவின் மரணத்திற்கான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

சம்பவ இடத்தில் அவரது பை மற்றும் மொபைல்போன் காணாமல் போனதால், இது ஒரு கொள்ளைக்கான கொல்லையாக இருக்கலாம் என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இலங்கை பிரஜையான சந்தேக நபர் அபைலிஜா படாவடிகே பாதும் உதயங், தீயை அணைக்காமல் குறித்த வளாகத்தை விட்டு வெளியேறியதாகக் கூறப்படுகிறது.

எவ்வாறெனினும், கைதின் பின்னர், தீப் பரவலைக் கண்டு “தீயை அணைக்க முடியாத அளவுக்கு அதிர்ச்சியடைந்ததாக” அவர் புலனாய்வாளர்களிடம் விசாரணைகளில் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

டா சில்வாவுடனான சந்தேக நபரின் தொடர்பு குறித்த விவரங்களை பொலிஸார் விசாரித்து வருகின்றனர்.
 

Leave a Reply