• Welcome to TamilsGuide
செய்திகள் 1

உயிரிழந்த மாணவி தொடர்பில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக்கொடுக்க வேண்டும் - அனுஷா சந்திரசேகரன் கோரிக்கை!

இலங்கை

உயிரிழந்த பாடசாலை மாணவி தொடர்பில் அரசாங்கம் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக்கொடுக்க வேண்டும் என சட்டத்தரணியும் சந்திர சேகரன் மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளருமான அனுஷா சந்திரசேகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

குறித்த மாணவி தொடர்பில் அரசாங்கம் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக்கொடுக்க வேண்டுமே தவிர இழைக்கப்பட்ட அநீதிக்கு சமூக வலைதளங்களில் தீர்வை தேட தேவையில்லை என கூறுவது பொறுத்தமற்றது என சந்திர சேகரன் மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளருமான அனுஷா சந்திரசேகரன் தனது கண்டனங்களை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

கொழும்பு கொட்டாஞ்சேனையில் கடந்த 29ம் திகதி 16 வயதான, பாடசாலை மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் எம் அனைவரையும் மிகவும் பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ளது.

குறித்த மாணவி ஒரு பிரபல மகளிர் பாடசாலையில் கல்வி கற்றுவந்த நிலையிலேயே ஆசிரியர் ஒருவரால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகியதாகவும் , இந்த சம்பவம் தொடர்பில் குறித்த மாணவி பாடசாலைக்கு அறிவித்தும் கூட இதற்கெதிராக நடவடிக்கை எடுக்கப்படாமல் குறித்த மாணவி பாடசாலையை விட்டு இடைவிலகியதாகவும் அறிய வந்துள்ளது.

இந்நிலையில் இந்த துயர சம்பவம் நிகழ்வதற்கு முன்னராக குறித்த மாணவி அதிக மனவுளைச்சலுக்கு உள்ளாகியிருந்தமையும் தெரியவந்துள்ளது.

இந்த கொடூர சம்பவம் தொடர்பில் பெற்றோர்களுக்கு நீதி கிடைக்காத ஒரு அவல சூழ்நிலையிலேயே சமூக வளைத்தளங்கள் வாயிலாக இந்த விடயம் அம்பலப்படுத்தப்பட்டிருக்கிறது. அதன் பின்னர் தான் அனைத்து தரப்பினரது கண்களும் திறந்து இது தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

இது தொடர்பில் மகளிர் அமைச்சரின் பாராளுமன்ற உரையில் சமூகவளைத்தளங்களினால் தீர்வை பெற்றுக்கொள்ள முடியாது என்ற கூற்று எமக்கு வேதனையளிக்கிறது.

காரணம் ஓரிரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஓர் நாசகார அரசாங்கத்தின் ஆட்சியையே தலைகீழாக மாற்றிய பெருமை இந்த சமூக வலைத்தளங்களுக்கு உண்டு என்பதை நான் சொல்லி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் இருக்காது என நினைக்கிறேன். இந்த அரசாங்கத்தை தீர்மானிக்கும் சக்தியாக கூட இந்த சமூக வலைத்தளங்கள் அளப்பரிய பங்காற்றியது என்பதை எவரும் மறுக்கவும் முடியாது.

எதிர்காலத்தில் இவ்வாறான துரதிர்ஷ்ட சம்பவங்கள் நிகழவே கூடாது என்பதற்காக இந்த விவகாரம் தொடர்பில் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நீதி கிடைக்க வேண்டும், குற்றவாளிகளுக்கு தக்க தண்டனை வழங்கப்பட வேண்டும்.

உயிரிழந்த பாடசாலை மாணவிக்கு நீதியை நிலைநாட்டுவதற்காகவும், எம் சமூகத்தில் எதிர்காலத்தில் இவ்வாறான துயர சம்பவங்கள் நிகழாமல் இருக்கவும் , என்னுடைய ஒத்துழைப்பு அனைத்து வழிகளிலும் இருக்கும் என்பதையும் நான் தெரிவித்துக்கொள்கின்றேன் எனவும் அவர் தெரிவித்தார்.
 

Leave a Reply