
இ.தொ.கா வின் சேவைகள் தொடரும் -வாக்களித்தவர்களுக்கு நன்றி தெரிவித்த ஜீவன்
இலங்கை
நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மீது நம்பிக்கை கொண்டு, வாக்களித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவிப்பதோடு இ.தொ.காவின் வெற்றிக்கு அயராது உழைத்த தொண்டர்கள், பொறுப்பாளர்கள், சமூக ஆர்வலர்கள், நலன்விரும்பிகள், அரச உத்தியோகஸ்தர்கள் மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் தமது நன்றிகளை தெரிவித்துக்கொள்வதாக இ.தொ.கா பொதுச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ” இம்முறை நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில், நுவரெலியா மாவட்டத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சேவல் சின்னத்தில் தனித்து போட்டியிட்டு 55,241 வாக்குககளை பெற்று 39 உறுப்பினர் ஆசனங்களை பெற்றுக்கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இதன் அடிப்படையில் நுவரெலியா மாநகர சபையில் 02 உறுப்பினர், தலவாக்கலை-லிந்துலை நகர சபை 02 உறுப்பினர்கள், ஹட்டன்-டிக்கோயா நகர சபை 02 உறுப்பினர், நுவரெலியா பிரதேச சபை 06 உறுப்பினர், அக்கரபத்தனை பிரதேச சபை 04 உறுப்பினர், அம்பகமுவ பிரதேச சபை 02 உறுப்பினர், ஹங்குரான்கெத்த பிரதேச சபை 02 உறுப்பினர், கொட்டகலை பிரதேச சபை 05 உறுப்பினர், நோர்வூட் பிரதேச சபை 06 உறுப்பினர்இ கொத்தமலை பிரதேச சபை 08 உறுப்பினர்கள் என மொத்தமாக 39 உறுப்பினர்களை பெற்றுக்கொண்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் நுவரெலியா மாவட்டம் தவிர்த்து ஏனைய மாவட்டங்களில்15 உறுப்பினர் ஆசனங்களையும் பெற்றுக்கொண்டுள்ளது எனவும், இதில் மாத்தளை மாவட்டத்தில் 06 உறுப்பினர்களையும், கண்டி மாவட்டத்தில் 04 உறுப்பினர்களையும், பதுளை மாவட்டத்தில் 04 உறுப்பினர்களையும், இரத்தினபுரி மாவட்டத்தில் 01 உறுப்பினர் ஆசனத்தையும் தன்னகர்த்தே கொண்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் மொத்தமாக இ.தொ.கா சேவல் சின்னத்தில் போட்டியிட்ட மாவட்டங்களில் 54 உறுப்பினர் ஆசனங்களை பெற்றுக்கொண்டுள்ளமை இ.தொ.கா விற்கு கிடைத்த மாபெறும் வெற்றியாகும் எனவும் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
அதேபோல் இதொ.கா வின் மக்களுக்கான சேவை தொடரும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.