கனவு நிறைவேறிய நாள் - ரஜினியை சந்தித்த டிராகன் இயக்குநர் நெகிழ்ச்சி
சினிமா
இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து மற்றும் பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் உருவாகி வெளியான திரைப்படம் 'டிராகன்'. ஏ.ஜி.எஸ். நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. லியோன் ஜேம்ஸ் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
திரைப்படம் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. தமிழ்நாடு முழுவதும் பெரும்பாலான திரையரங்குகளில் ஹவுஸ் புல் ஷோக்கள் ஓடிக்கொண்டு இருக்கிறது.
உலகளவில் வசூலை குவித்து வரும் 'டிராகன்' திரைப்படத்தை பார்த்துவிட்டு அப்படத்தின் இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து, கதாநாயகன் பிரதீப் ரங்கநாதன் மற்றும் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ஆகியோரை நேரில் அழைத்து நடிகர் ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் பாராட்டியது தொடர்பாக அஷ்வத் மாரிமுத்து எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
என்ன ஒரு எழுத்து அஷ்வத்... அற்புதம்.... என்று ரஜினி சார் சொன்னார்.
நல்ல படம் பண்ணனும், படத்தை பார்த்து ரஜினி சார் வீட்டுக்கு நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்து படத்தை பற்றி பேசனும். இது இயக்குநர் ஆகணும்னு கஷ்டப்படுற ஒவ்வொரு உதவி இயக்குநர்களேட கனவு! கனவு நிறைவேறிய நாள் இன்று என்று கூறியுள்ளார்.























