நம்ம மனசுல நம்மை அறியாத ஒரு வஞ்சம் இருக்கும்....
சினிமா
"என்னை கஷ்டப்படுத்தினியா...இப்ப பார்றா..."ன்னு வரும் வஞ்சம் காலம் கடந்துட்டா அது பிள்ளைகளிடம் போகும். சுதந்திர போராட்ட காலத்தில் வெள்ளைக்காரர்கள் மீது இந்த வஞ்சம் அதிகம். அதுவும் சுதந்திர போராட்ட தியாகி மகன்களுக்கு இல்லாம இருக்குமா?
இங்கிலாந்தைச் சேர்ந்த ஜார்ஜ் நன்றாக படித்தவர். இந்திய சிவில் சர்வீஸஸ் தேர்வு எழுதி அதில் ஜெயித்ததும் இந்தியாவுக்கு வேலைக்கு வருகிறார். ஸ்பெஷல் செட்டில்மெண்ட் ஆபிசராகி, சென்சஸ் அதிகாரியாக பணியாற்றுகிறார். 1920லிருந்து 22 வரை சென்னை முனிஸிபல் கமிஷனராக இருக்கிறார். சீப் செக்ரட்டரியாக கூட பதவி கிடைக்கிறது. கொஞ்ச வருடம் ஒரிஸா கவர்னர். கொஞ்ச வருடம் கொச்சின் திவான் என போகிறது.
ஜார்ஜ் சென்னையில் ஒரு பெரிய வீடு கட்டி குடியேறுகிறார். ஒன்றரை ஏக்கர் விசாலமாக உள்ள இடத்தில் அந்த பங்களாக மிக அழகாக இருக்கிறது.
இந்த காலக்கட்டத்தில் விழுப்புரத்தில் சின்னையா என்று ஒரு தேசியவாதி இருக்கிறார். அவருக்கு இரண்டு மகன்கள். மூன்றாவது மகன் பிறந்துதுமே அவர் வெள்ளை அரசால் கைது செய்யப்படுகிறார். அவருக்கு ஏழு வருட சிறை தண்டனை கிடைக்கிறது. தலைவன் இல்லாததால் குடும்பமே வறுமையில் தத்தளிக்கிறது. உண்ண உணவில்லை... உணவுப்பஞ்சம்...பசி....பட்டினி.
மூன்றாவது மகன் பசி பொறுக்காமல் சோறு கிடைக்குமென கேட்டதும் ஒரு நாடகக்கம்பெனியில் சேர்கிறான். நன்றாக பாடுபவன் என்பதால் வாய்ப்பு உடனே கிடைக்கிறது. கம்பெனிகளில் நடிகனாகி பின் தன் அன்னையை ஒரு நாள் வளர்ந்த பிறகு சந்திக்கிறான்.
இப்போது வயிற்றுப்பசி அடங்கி விட்டது. ஆனால் நாடகத்தில் சேர்ந்து அது தான் தொழில் என்றானதும் நடிப்புப்பசி தொடங்கி விட்டது. அந்த பசி மட்டும் அடங்கவில்லை அவனுக்கு. நாடகங்களிலிருந்து சினிமாவில் சேர்ந்து முதல் படத்திலேயே பட்டிதொட்டியெங்கும் பெயர் பெற்ற நடிகனாகிறான். கை நிறைய காசு, பணம்...
சிறு வயதில் வறுமையில் வாடிய அன்னை. சிறையில் வாடிய தந்தை. கூடவே அண்ணன்களும் இருக்க எல்லோரும் சேர்ந்து வாழ ஒரு வீடு இதே சென்னை மாநகரத்தில் வாங்க தீர்மானிக்க அப்போது ஒரு வீடு வருகிறது.
வெள்ளைக்காரர் கவர்னர் ஜார்ஜ் வாழ்ந்த அதே பங்களா. அப்பாவுக்கு இதை விட மன சந்தோஷம் தரும் விஷயம் வேறென்ன இருக்க முடியும்? அந்த வீட்டை அப்பா சின்னையா மன்றாயர் பெயரிலேயே வாங்குகிறான். இரண்டு வருடங்கள் அந்த வீட்டை புதுப்பிக்கும் பணிகள் நடக்கிறது. இரண்டு வருட புதுப்பித்தலுக்குப்பிறகு அன்னை இல்லத்தில் குடியேறுகிறார்கள்.
அந்த மூன்றாவது மகன் நம் அருமை சிவாஜி அவர்கள் தான். அந்த ஒரிசா கவர்னர் ஜார்ஜ் டி.போக். அவர் வாங்கிய வீட்டுக்கு அன்னையின் பெருமையால் வைத்த பெயர் 'அன்னை இல்லம்'.
ஜார்ஜ் டி. போக் என்கிற அந்த வெள்ளை கவர்னர் வாழ்ந்த அந்த வீடு இருக்கும் சாலைக்கு ஜார்ஜ் பெயராலேயே 'போக் ரோடு' என பெயர் சூட்டப்படுகிறது. போக் ரோடில் உள்ள அந்த வீட்டை வெள்ளையர் வாழ்ந்த வீட்டை அவர்களால் சிறைக்கனுப்பப்பட்ட ஒரு தேசியவாதியின் பிள்ளையே வாங்க முடிகிறதென்றால் காலம் செய்யும் தீர்ப்பு தானே இது.
சிவாஜி போன்ற பிள்ளைகள் அப்பாவுக்கு கிடைத்த கொடுமைக்கு இப்படித்தானே ஏதாவது செய்து ஆறுதலடைய முடியும்....
அன்னை இல்லம் இருக்கும் சாலைக்கு பின்னாளில் சிவாஜி பெயர் சூட்டப்பட்டது.
Selvan Anbu























