
சந்திரபாபு நாயுடு குறித்து அவதூறு பேச்சு - பிரபல நடிகர் கைது
சினிமா
தெலுங்கு திரையுலக நடிகர் பூசாணி கிருஷ்ண முரளி. 150-க்கும் மேற்பட்ட படங்களில் எழுத்தாளராக பணியாற்றி உள்ளார். நகைச்சுவை, குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார்.
ஒய். எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கிருஷ்ண முரளி கடந்த ஜெகன்மோகன் ஆட்சியின் போது சினிமா தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவராக இருந்தார்.
அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த சந்திரபாபு நாயுடு, அவரது மனைவி, மகன் நாராலோகேஷ் மற்றும் பவன் கல்யாண் குறித்து அவதூறாக பேசினார். இவர் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் தெலுங்கு தேசம் கட்சியினர் புகார் செய்தனர்.
திருப்பதி, சித்தூர் போலீஸ் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
சந்திரபாபு நாயுடு முதல் மந்திரியாக பதவி ஏற்ற பிறகு கிருஷ்ண முரளி மீதான பழைய வழக்குகள் சி.ஐ.டி போலீசாருக்கு மாற்றப்பட்டன.
சி.ஐ.டி போலீசார் கிருஷ்ண முரளியை தேடி வந்தனர். அவர் ஆந்திர எல்லையை ஒட்டி உள்ள ராய் சோட்டியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
ரகசிய தகவலின் பேரில் ராய்சோட்டி சென்ற போலீசார் அவரை கைது செய்தனர். அப்போது கிருஷ்ண முரளி போலீசாருடன் வர மறுத்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதையடுத்து போலீசார் வலுக்கட்டாயமாக இழுத்து வந்து வேனில் ஏற்றி அன்னமைய்யா மாவட்டம், ஒபுலவாரி பள்ளி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இன்று காலை ராஜம்பேட்டை கோர்ட்டில் படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.