
இந்தியத் துணைத் தூதரத்துக்கு முன்னால் பதற்றம்
இலங்கை
இந்திய மீனவர்களின் சட்டவிரோத மீன்பிடி செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துமாறு வலியுறுத்தி யாழ் தீவக மீனவ அமைப்புகள் இணைந்து இன்று காலை கவனயீர்ப்புப் போராட்டமொன்றினை முன்னெடுத்துள்ளனர்.
யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் தமது போராட்டத்தினை ஆரம்பித்த போராட்டக்காரர்கள், யாழ் மாவட்ட கடற்தொழில்நீரியல் வள திணைக்களத்தின் உதவி ஆணையாளரிடம் மகஜர் ஒன்றினைக் கையளித்துள்ளதோடு, அதனைத் தொடர்ந்து யாழ் இந்திய துணை தூதரகத்தினை சென்றடைந்தனர். மேலும் அங்கு போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
இதன்போது யாழ் பொலிஸ் நிலைய தலைமையக பொறுப்பதிகாரி, இந்திய துணைத் தூதுவராலய அதிகாரிகளை சந்தித்து மகஜர் ஒன்றினை வழங்குவதற்கு போராட்டக்காரர்களுக்கு அனுமதி வழங்கியதாகவும், இதனையடுத்து போராட்டக்காரர்களில் சிலர் இந்திய துணைத் தூதுவராலய அதிகாரிகளை சந்தித்து மகஜரொன்றை கையளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை போராட்டக்காரர்கள் வருகை தந்த பாதைக்கு போக்குவரத்து பொலிஸார் கடுமையான பாதுகாப்பினை வழங்கியதோடு பொதுமக்களை குறித்த பாதையில் பயணிக்க அனுமதி மறுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பொலிஸார் கண்ணீர் புகைகுண்டுகள் சகிதம் வருகை தந்து இந்திய தூதரகத்திற்கு கடுமையான பாதுகாப்பினை வழங்கியிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.