• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ரிசார்ட் நகரமான காசா - தங்க சிலை.. பெண்களுடன் நடனம் நேதன்யாகுவுடன் மது.. டிரம்ப் வெளியிட்ட AI வீடியோ

கடந்த 13 மாதகால போரினால் 56,000 பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலின் தாக்குதலுக்கு பலியாகியுள்ளனர். காசா நகரம் முற்றிலுமாக சீர்குலைந்துள்ளது. கடந்த மாதம் ஏற்பட்ட தற்காலிக போர் நிறுத்தத்தால் லட்சக்கணக்கான மக்கள் மீண்டும் காசாவுக்கு திரும்பினர்.

ஆனால் மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ள உபகரணங்கள் இல்லாமல் மக்கள் இன்னும் தற்காலிக முகாம்களிலேயே வாழ்ந்து வருகின்றனர். குளிர்காலம் தொடங்கிய காசாவில் மக்கள் வெப்பமின்மை காரணமாக அவதிப்பட்டு வருகின்றனர். இதுவரை 15 குழந்தைகள் தேவையான மருத்துவ வசதிகள் இல்லாமல் குளிர் காரணமாக உயிரிழந்துள்ளதாக நேற்று காசா மருத்துவமனைகள் நிர்வாகம் தெரிவித்தது.

இதற்கிடையே காசாவை வருங்காலத்துக்கான ரியல் எஸ்டேட் தளம் என்றும் அதை விலைக்கு வாங்கி சீரமைக்க போவதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறிவருகிறார். அங்குள்ள லட்சோபலட்சம் மக்களை நிராதாரமாக வெளியேற்றி அரபு நாடுகளில் குடியேற்றம் செய்யும் திட்டத்தையும் டிரம்ப் முன்மொழிந்து வருகிறார். டிரம்பின் இந்த சுத்தப் படுத்துதல் திட்டம் தொலைநோக்கு பார்வை கொண்டதாக இஸ்ரேல் அதிபர் நேதன்யாகு வர்ணித்துள்ளார்.

இந்நிலையில் காசாவை விடுமுறை ரிசார்ட் சுற்றுலாத் தலமாக சித்தரித்து டிரம்ப் தனக்கு சொந்தமான ட்ரூத் சமூக ஊடகத்தில் அவரது அதிகாரபூர்வ பக்கத்தில் ஏஐ வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார். அவரின் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட அதிகாரப்பூர்வ சமூக ஊடக பக்கங்களிலும் இந்த வீடியோ பகிராப்பட்டுள்ளது.

வீடியோவின் தொடக்கத்தில், காசா மிகவும் பரிதாபகரமான நிலையில் காட்டப்பட்டுள்ளது, அங்கு மக்கள் பசியால் அவதிப்படுகிறார்கள். இதற்குப் பிறகு, அடுத்து என்ன நடக்கும் என்ற கேள்வி வீடியோவில் எழுப்பப்பட்டுள்ளது. இதன் பிறகு காசா ஒரு சுற்றுலா தலமாகக் காட்டப்படுவதைக் காண்கிறோம்.

ஏஐ உருவாக்கிய வீடியோவில் காசா ஒரு 'கடற்கரை ரிசார்ட்' போல காட்டப்பட்டுள்ளது. அங்கு டிரம்பும் இஸ்ரேலிய பிரதமர் நேதன்யாகுவும் கடற்கரையில் காக்டெயில் குடிப்பதையும், எலான் மஸ்க் ஹம்முஸ் சாப்பிடுவதையும் காணலாம்.

வீடியோவில், காசா பப்கள், கிளப்புகள் மற்றும் ரிசார்ட்டுகளால் நிரம்பியிருப்பதைக் காணலாம். அந்த வீடியோவில் 'டிரம்ப் காசா' என்ற பெயருடைய ஒரு ஹோட்டலும் காட்டப்பட்டுள்ளது. காசாவின் நடுவில் டிரம்பின் ஒரு பெரிய தங்கச் சிலையும் உள்ளது. ஒரு புறம் அத்தியாவசிய உதவிகள் இன்றி காசா மக்கள் தவித்து வரும் சூழலில் டிரம்ப் வெளியிட்ட இந்த வீடியோ பலரிடையேயும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. 
 

Leave a Reply