• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஹசன் நஸ்ரல்லா இறுதி சடங்கு.. வானில் வட்டமடித்த இஸ்ரேல் போர் விமானங்களால் சலசலப்பு

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான போரில் லெபனானின் கிளர்ச்சி அமைப்பான ஹிஸ்புல்லா இஸ்ரேலை எதிர்த்து சண்டையிட்டு வந்தது. இதனால் கோபமடைந்த இஸ்ரேல் லெபனான் நகரங்கள் மீது நடத்திய கொடூர தாக்குதல்களில் பொதுமக்கள் உள்பட 3 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். மேலும், லட்சக்கணக்கானோர் புலம்பெயர்ந்தனர்.

நான்கு மாதங்கள் வரை தாக்குதல் தொடர்ந்த நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் 1-ம் தேதி போர் நிறுத்தம் ஏற்பட்டது. இஸ்ரேலுக்கு எதிராக நடந்த தாக்குதலில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டார்.

இந்த நிலையில், உயிரிழந்து கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் கழித்து ஹசன் நஸ்ரல்லாவுக்கு பெய்ரூட்டில் இறுதி சடங்குகள் செய்யப்பட்டன. இதற்காக நேற்று ஆயிரக்கணக்கானோர் பெய்ரூட்டில் கூடியிருந்தனர். உயிரிழந்த நஸ்ரலாவுக்கு மரியாதை செலுத்தும் நோக்கில் பொது மக்கள் கூடியிருந்த நிலையில், இறுதி சடங்கின் போது இஸ்ரேல் போர் விமானங்கள் வான்வெளியில் வட்டமடித்தன.

இறுதி சடங்கில் பொது மக்கள் நஸ்ரல்லாவுக்கு மரியாதை செலுத்தும் கோஷங்களை எழுப்பிய நிலையில், போர் விமானங்களின் சத்தத்தால் மக்களின் கோஷங்கள் கேட்க முடியாத நிலை உருவானது. இது தொடர்பாக வெளியாகி இருக்கும் வீடியோக்களில் இஸ்ரேல் வான்படைக்கு சொந்தமான நான்கு எஃப்-16 ரக போர் விமானங்கள் இறுதி சடங்கு நடைபெற்ற இடத்தின் மேல்பரப்பில் வட்டமடிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இது தொடர்பாக இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "இன்று ஹசன் நஸ்ரல்லாவுக்கு இறுதி சடங்கு. உலகம் இன்று சிறந்த இடமாக இருக்கிறது," என குறிப்பிட்டுள்ளது.

பெய்ரூட்டில் உள்ள கேமிலி சமௌன் மைதானத்தில் இறுதி சடங்கு நடைபெற்றது. இதில், இறுதி சடங்கு தொடங்க சில மணி நேரங்களுக்கு முன்பே கிட்டத்தட்ட 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நஸ்ரல்லாவுக்கு மரியாதை செலுத்த மைதானத்தில் ஒன்றுகூடியிருந்தனர்.
 

Leave a Reply