
சொத்துக்கள் முடக்கம் - இயக்குனர் ஷங்கர் வருத்தம்
சினிமா
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் ஷங்கர். சமீபத்தில் இவர் இயக்கத்தில் ராம் சரண் நடித்து வெளியான திரைப்படம் கேம் சேஞ்சர். இந்தப் படம் மக்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றது.
இந்நிலையில் ஷங்கரின் 10.11 கோடி ரூபாய் அசையா சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது. ஷங்கர் இயக்கத்தில் கடந்த 2010-ம் ஆண்டு ரஜினிகாந்த் மற்றும் ஐஷ்வர்யா ராய் நடிப்பில் எந்திரன் திரைப்படம் வெளியானது. இப்படத்தின் கதை தன்னுடைய ஜிகுபா படத்தின் கதையோடு பொருந்திப் போனதால் ஆருர் தமிழ்நாடன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அமலாக்கதுறை விசாரணையில் எந்திரன் திரைப்படத்தின் கதை, திரைக்கதை மற்றும் கதாபாத்திரங்கள் ஜிகுபா படத்தின் கதையை ஒன்றியிருந்தது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து இயக்குநர் ஷங்கர் எந்திரன் திரைப்படத்தின் சம்பள தொகையை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.
எந்திரன் திரைப்படத்திற்கு இயக்குநர் ஷங்கர் சம்பளமாக 11.5 கோடி ரூபாய் வாங்கியதாக கூறப்படுகிறது. இதனால் தற்பொழுது அவருடைய 10.11 கோடி ரூபாய் அசையா சொத்தை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
இதற்கு இயக்குனர் ஷங்கர் அவருடைய கருத்தை பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது " அமலாக்கத்துறை என்னுடைய 3 அசையா சொத்துகளை முடக்கினர். போதிய ஆதாரங்கள் எதுவும் இல்லாமல் இச்செயலை செய்தது எனக்கு வருத்தம் அளிக்கிறது. இதுவரை என்னிடம் அமலாக்கத்துறை எந்தவித தொடர்பும் மேற்கொள்ளவில்லை.
ஏற்கனவே உச்சநீதிமன்றம் எந்திரன் கதை ஜிகுபா கதையுடன் ஒன்றி போன வழக்கை தள்ளுபடி செய்தது. இருதரப்பினரையும் அழைத்து பேசி, ஆதாரங்களை படித்து பார்த்து எந்திரன் கதையின் பதிப்புரிமை உரிமையாளராக ஆரூர் தமிழ் நாடன் தன்னை அறிவிக்கக் கோரி தாக்கல் செய்த கோரிக்கையை நிராகரித்தது.
இவ்வளவு தெளிவாக ஒரு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பிறகும். அமலாக்கத்துறை என்னுடைய அசையா சொத்துகளை முடக்கியது மேலும் என்னை மன வருத்தம் அளிக்கிறது" என கூறியுள்ளார்.