
அதிகரித்து வரும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களினால் நாட்டின் சுற்றுலாத்துறை பாதிக்கப்படும்
இலங்கை
நாட்டில் அதிகரித்து வரும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களினால் நாட்டின் சுற்றுலாத்துறை பாதிக்கப்படுமெனவும், வெளிநாட்டு முதலீட்டாளர்களும் நாட்டில் முதலீடு செய்ய அஞ்சுவார்கள் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இன்று நாடாளுமன்றில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது தேசிய பாதுகாப்புக்கு குறைந்த நிதியை ஒதுக்கியுள்ளதாகவும் யாருக்கும் எங்கும் சுதந்திரமாக செல்ல முடியும் என்றும் ஆளும் தரப்பு அமைச்சரவைப் பேச்சாளர் கூறிய போதும் தற்போது இரண்டு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நேற்றிரவு மித்தெனிய பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் போது இரு குழந்தைகள் உயிரிழந்துள்ளதோடு, இன்று காலை நீதிமன்றத்துக்குள் நீதவான் முன்பாகவே ஒருவர் கொல்லப்பட்டுள்ளார் எனத் தெரிவித்த நாமல் ”ஒரு புறம் பிரஜைகள் எங்கும் சுதந்திரமாக செல்லலாம். பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் கூறினாலும், மறுபுறம் பட்டப்பகலில் கொலைகள் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன எனவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் மன்னார் நீதிமன்றுக்கு வெளியிலும் கொழும்பு நீதிமன்றத்துக்குள்ளும் கொலைகள் இடம்பெறுகின்றன எனவும்,
இந்த நிலையில், இன்று சட்டத்தரணிகள் சங்கத்தின் தேர்தல் நடைபெறுகின்றது எனவும், இந்த விடயங்கள் தொடர்பாக அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் எனவும் நாமல் தெரிவித்துள்ளார்.
மேலும் ”நாட்டில் இவ்வாறான சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருந்தால் வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஒருபோதும் நாட்டுக்குள் வரவழைக்க முடியாது எனத் தெரிவித்த அவர் பிரஜைகளின் பாதுகாப்பு மிகவும் முக்கியமாகும் எனவும், சுற்றுலாத்துறை தலைத்தூக்கும் இந்த சந்தர்ப்பத்தில், இவ்வாறான கொலைகள் இதற்கு பாரிய பாதகமாக அமையும் எனவும், தெரிவித்துள்ளார்.
அத்துடன் குரங்கு பாய்ந்து மின்சாரம் தடைப்பட்டதாகக் கூறினார்கள் எனவும், மறுபுறம் நாட்டில் தொடர்ச்சியாக கொலைகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன எனவும் இவற்றை சர்வதேச ஊடகங்களும் செய்தியாக வெளியிடும்போது, எப்படி சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருவார்கள்? எனவும் கேள்வி எழுப்பிய நாமல், அரசாங்கம் இதுதொடர்பாக உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.