
யாழ்., அரியாலையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
இலங்கை
யாழில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அரியாலை மாம்பழம் சந்தியிலேயே நேற்று இந்த விபத்து நேர்ந்துள்ளது.
இவ்விபத்தில் 55 வயது மதிக்கத்தக்க ஆணொருவர் ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த நபர், யாழ்ப்பாணம் நோக்கி தனது துவிச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்தபோது, யாழ்ப்பாணம் நோக்கி சென்று கொண்டிருந்த டிப்பர் ரக வாகனம் வேகக்கட்டுப்பாட்டை இழந்து அவர் மீது மோதியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்தவரின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதோடு, விபத்தினை ஏற்படுத்திய சாரதி யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விபத்து தொடர்பான விசாரணைகளை யாழ்., பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.