
வங்காளதேசத்துக்கு நிச்சயம் திரும்புவேன்- ஷேக் ஹசீனா
வங்காளதேசத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்த மாணவர்கள் போராட்டத்தால் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் அடைந்தார்.
இதையடுத்து முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது. இந்தியாவில் உள்ள ஷேக் ஹசீனாவை நாடு கடத்த வேண்டும் என வங்காளதேச அரசு கோரிக்கை விடுத்து வருகிறது.
இந்தநிலையில் அவாமி லீக் கட்சியின் (ஷேக் ஹசீனா கட்சி) ஐரோப்பா பிரிவு ஏற்பாடு செய்த காணொலி நிகழ்ச்சியில் ஷேக் ஹசீனா பங்கேற்று பேசினார். இதில் வன்முறையில் கொல்லப்பட்ட போலீஸ்காரர்களின் குடும்பத்தினருடன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
நான் வங்காளதேசத்துக்கு நிச்சயம் திரும்பி வருவேன். நீங்கள் அனைவரும் பொறுமை காத்து ஒற்றுமையாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். போலீஸ் அதிகாரிகளின் மரணங்களுக்குப் பழிவாங்குவேன். அவர்கள் அரசியல் வன்முறைக்கு பலியான தியாகிகள். நான் முன்பு செய்தது போல் நீதி வழங்குவேன்.
என்னை கொலை செய்ய முயன்றனர். ஆனால் நான் உயிர் பிழைத்தேன். கடவுள் எனக்கு 2-வது வாழ்க்கையை அளித்துள்ளார். இது ஒரு காரணத்திற்காக நடந்தது என்று நான் நம்புகிறேன்.
முகமது யூனுசுக்கு அரசாங்கத்தை நடத்துவதில் எந்த அனுபவமும் இல்லை. அவர் அனைத்து விசாரணை குழுக்களையும் கலைத்து, மக்களைக் கொல்ல பயங்கரவாதிகளை கட்டவிழ்த்து விட்டார். அவர்கள் வங்காளதேசத்தை அழிக்கிறார்கள். பயங்கர வாதிகளின் இந்த அரசாங்கத்தை அகற்றுவோம்.
உயிரிழந்த அவாமி லீக் உறுப்பினர்களின் குடும்பங்களுக்கு உதவ ஒரு அறக்கட்டளையை அமைத்திருந்தேன். ஆனால் அதன் வங்கி கணக்குகள், அறக்கட்டளை மற்றும் எங்கள் சொத்துக்கள் அனைத்தும் இந்த அரசாங்கத்தால் முடக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.