இந்தியாவில் கால் பதிக்கும் டெஸ்லா.. வேலைக்கு ஆளெடுக்கும் பணிகள் தொடக்கம்
இந்தியாவில் நுழைய மின்சார கார் உற்பத்தி நிறுவனமான டெஸ்லா சமீப காலமாக ஆர்வம் காட்டி வருகிறது.
ஆனால் வரி விகிதம் காரணமாக டெஸ்லா பின்வாங்கியது. எனவே சமீபத்தில் கார்கள் மீதான சுங்கவரியை 110 சதவீதத்தில் இருந்து 70 சதவீதமாக மத்திய அரசு குறைத்தது.
இதற்கிடையில் 2 நாள் பயணமாக அதிபர் டிரம்பின் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி கடந்த வாரம் அமெரிக்கா சென்றார். அங்கு எக்ஸ், ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா நிறுவனத்தின் உரிமையாளரான எலான் மஸ்க்குடன் மோடி சந்திப்பு நிகழ்ந்தது.
இந்நிலையில் இந்தியாவில் நுழைவதற்கான ஆரம்பக் கட்ட பணிகளை டெஸ்லா நிறுவனம் தொடங்கியுள்ளது. இந்தியாவில் 13 வகையான பணிகளுக்கு ஆட்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை டெஸ்லா நிறுவனம் 'லிங்க்ட் இன்' தளத்தில் வெளியிட்டுள்ளது.
அதில் ஐந்து வகையான பணிகளுக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் டெல்லி மற்றும் மும்பையிலும், எஞ்சிய பணிகளுக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் மும்பையில் பணியாற்ற வேண்டும் என அந்த விளம்பரத்தில் கூறப்பட்டு உள்ளது.
இதன்மூலம் டெஸ்லா நிறுவனம் விரைவில் இந்தியாவில் வர்த்தகத்தை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.























