
சின்ன தம்பி (1991)
சினிமா
1991ஆம் ஆண்டு வெளியான படங்களிலேயே ஒரு வருடத்துக்கு மேல் ஓடி, வசூலை வாரிக்குவித்து சாதனை படைத்த படம் "சின்னதம்பி'. கதாநாயகனாக நடித்த பிரபு, படத்தை இயக்கிய பி.வாசு ஆகியோருக்குத் திருப்பு முனையாக அமைந்த படம் இது. தொண்ணூறுகளின் துவக்கத்தில் வளர்ந்து வரும் நடிகையாக இருந்த குஷ்பு, "சின்ன தம்பி' படத்துக்குப் பிறகு புகழின் உச்சிக்கே சென்றார்
ஒரு வருடம்வரை ஓடி சாதனை படைத்த "சின்னதம்பி' 49 திரையரங்குகளில் 100 நாட்கள் ஓடியதுடன், 19 திரையரங்குகளில் வெள்ளி விழாவும் கண்டது.
படத்தின் மகத்தான வெற்றிக்கு முக்கிய காரணம் இளையராஜா இசையில் உருவான பாடல்கள். "தூளியிலே ஆடவந்த', "போவோமா ஊர்கோலம்', "அட உச்சந்தலை', "குயிலைப் படிச்சு', "அரைச்ச சந்தனம்', "நீ எங்கே என் அன்பே' ஆகிய அனைத்து பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆயின. இதில் "தூளியிலே ஆட வந்த' என்ற பாடல் மட்டும் மூன்று முறை படத்தில் இடம் பெற்றது.
மாலைக்கண் நோயாளி வேடத்தில் கவுண்டமணி செய்த காமெடிகள் அனைத்தும் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்று படத்தின் வெற்றிக்குத் துணை நின்றன.
சிறந்த படம், இயக்குநர், நாயகன், நாயகி, பின்னணி பாடகர், பாடகி, நடன இயக்குநர் ஆகிய ஏழு விருதுகளை தமிழக அரசு இந்தப் படத்துக்கு வழங்கியது.
இதே போல் "சினிமா எக்ஸ்பிரஸ்' வழங்கும் விருதுகளும் ஏழு பிரிவுகளில் இப்படத்துக்குக் கிடைத்தன. மேலும் "பிலிம்பேர்' பத்திரிகையும் "சின்னதம்பி' படத்தை சிறந்த படமாகத் தேர்ந்தெடுத்து விருது வழங்கியது.
வி.ரவிச்சந்திரன், மாலாஸ்ரீ நடிக்க டி.ராஜேந்திர பாபு இயக்கத்தில் "ராமாச்சாரி' என்ற பெயரில் இப்படம் கன்னடத்தில் உருவானது.
வெங்கடேஷ், மீனா நடிக்க, ரவிராஜா பினிசெட்டி இயக்கத்தில் "சன்ட்டி' என்ற பெயரில் தெலுங்கிலும், வெங்கடேஷ், கரிஷ்மா கபூர் நடிக்க முரளி மோகன்ராவ் இயக்கத்தில் "அனாரி' என்ற பெயரில் ஹிந்தியிலும் உருவானது.