
மதராஸி திரைப்படம் கண்டிப்பாக சிவகார்த்திகேயனை அடுத்த கட்ட ஆக்ஷன் ஹீரோவாக மாற்றும் - ஏ.ஆர் முருகதாஸ்
சினிமா
சிவகார்த்திகேயன் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தனது 23-வது திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ருக்மினி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்தை ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இதற்கு இசை அமைக்கிறார்.
நேற்று படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களும் மற்றும் டைட்டில் டீசர் வெளியானது. படத்திற்கு மதராஸி என தலைப்பு வைத்துள்ளனர். சிவகார்த்திகேயன் மிகவும் முரட்டு தோற்றத்தில் காணப்படுகிறார்.
சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் இயக்குனரான ஏ.ஆர் முருகதாஸ் மதராஸி திரைப்படத்தை பற்றி சில சுவாரசிய விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர் " மதராஸி படத்தின் படப்பிடிப்பு பணிகள் பெரும்பாலான பகுதி முடிந்துவிட்டது. இன்னும் கிளைமாக்ஸ் பகுதி மட்டும் 12 நாள் படப்பிடிப்பு பண்ண வேண்டும். அனிருத் படத்திற்கான பின்னணி இசையை முடித்துவிட்டார்.
வட இந்தியர்கள் நம் தமிழர்களை எப்படி பார்க்கிறார்கள், நினைக்கிறார்கள் என்பதை வைத்து தான் திரைப்படத்தின் தொடக்கம் அமைந்துள்ளது அதனால் மதராஸி என்ற தலைப்பை வைத்துள்ளோம். இப்படம் கண்டிப்பாக சிவகார்த்திகேயனை அடுத்த கட்ட ஆக்ஷன் ஹீரோவாக மாற்றும். கஜினி திரைப்படத்தில் எப்படி மறதியோ, துப்பாக்கி படத்தில் ஸ்லீப்பர் செல் மாதிரி இப்படத்திலும் சிவகார்த்திகேயனுக்கு ஒரு வித்தியாச கதாப்பாத்திரம். அதை இப்பொழுது என்னால் சொல்ல முடியாது" என கூறியுள்ளார்.
ஆக்சன் கலந்த கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது.
திரைப்படத்தின் ஆடியோ உரிமையை ஜங்கிலி மியூசிக் நிறுவனம் வாங்கியுள்ளது.