என் சொந்த வீட்டைவிட இதுவே எனக்கு மகிழ்ச்சி.. சூர்யா நெகிழ்ச்சி
சினிமா
சென்னை தி நகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள அகரம் அறக்கட்டளை அலுவலக திறப்பு விழாவில் நடிகர் சூர்யா தனது குடும்பத்தினருடன் கலந்துகொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது:-
கல்வியே ஆயுதம் , கல்வியே கேடயம். சொந்த வீடு கட்டியபோது இருந்த சந்தோஷத்தை விட , இந்த விழா ரொம்ப சந்தோஷத்தை தருகிறது.
எந்த குறையும் இல்லாமல் எல்லாவற்றையும் செய்துவிட வேண்டும் என்று ஆசை பட்டோம். 20 வருடங்களுக்கு பிறகு இப்போது இந்த இடம் கிடச்சிருக்கு.
இது படிப்புக்காக கொடுக்கின்ற நன்கொடையில் பண்ண இடம் கிடையாது. இது நீங்கள் எனக்கு கொடுத்த வாய்ப்பு. எனக்கு இருக்க வருமானத்தின் மூலமா பண்ண கட்டிடம்தான் இது.
நன்கொடையா வர ஒவ்வொரு காசும், படிப்புக்கும், படிப்பு சார்ந்த செலவுகளுக்கு மட்டுமே பயன்படுத்திக் கொண்டு இருக்கிறோம்.
இதை ஏன் சொல்கிறேன் என்றால்.. 10 ஆயிரத்திற்கும் மேல் விண்ணப்பங்கள் அரசுப் பள்ளிகளில் இருந்து வந்துக் கொண்டிருக்கிறது. அவர்களுக்கான தேவையும் அதிகமாக இருக்கிறது.
வருடத்திற்கு நாங்கள் 700 மாணர்களிடம் மட்டும் தான் அவர்களுடைய வாழ்க்கையை தொட முடிகிறது. மாற்ற முடிகிறது. இன்னும் நிறைய அன்பு தேவைப்படுகிறது. பணம் மட்டும் இல்லாமல் உங்கள் அனைவருடைய நேரம் தேவைப்படுகிறது.
அகரம் இத்தனை ஆண்டுகள் நடைபெற்று வருகிறது என்றால் அது தன்னார்வலர்களால் தான்.
இவ்வாறு கூறினார்.






















