• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஆதலால் காதல் செய்வீர்.. தினங்களை கடந்து கொண்டாடப்பட வேண்டிய தினம்!

உலகம் முழுவதிலும் காதலர் தினம் இன்று (பிப்ரவரி 14) கொண்டாடப்படுகிறது. காதல் என்பது இனம், மதம், நாடு, மொழி என்ற வரையறைகளுக்குள் சிக்காமல் உலகமெங்கும் பரவி நிற்கும் ஒன்று. ஐந்தறிவு மிருகங்கள் தொடங்கி ஆறறிவு மனிதர்கள் வரை காதல் என்பது வாழ்வை அர்த்தமாகும் உணர்வு. அந்த உணர்வு ஒவ்வொருவரிடத்திலும் அவர்களின் வாழ்வில் ஏதாவது ஒரு கட்டத்தில் நிச்சயம் தோன்றியிருக்கவே செய்யும்.

அது பள்ளி பருவமாக இருந்தாலும், தள்ளாடும் வயோதிகமாக இருந்தாலும் காதல் துளிர்க்கும் தருணங்கள் வாழ்வின் முழுமையை உணர வைக்கும் வல்லமை கொண்டவை. காதலை வெறுமனே உடலின் பாற்பட்ட ஈர்ப்பு என்று கருதுபவர்கள் பரிதாபத்திற்குரியர்கள். காதலின் உண்மை சாராம்சம் அறியாதவர்கள்.

சமூகம் என்ற கட்டமைப்பு காதலுக்கு எதிராக எத்தனை கற்பிதங்களை உருவாக்கினாலும், தனிமனித உள்ளங்களுக்குள் சுடர்விடும் பொறியை, உயிர்வாழ்தலின் உண்மைப் பொருளை சமூகத்தால் மூடி வைக்க முடியாது.

காதலால் நிரம்பிய உலகம் வஞ்சகம் அற்ற வன்முறை அற்ற அன்பின்பாற்பட்டதாக இருக்கும். ஒருவரை ஒருவர் சுரண்டவும் ஏமாற்றவும் மனிதர்கள் தங்களுக்குள் உருவாக்கி வைத்துள்ள வர்க்கங்கள் முதலான போலி படாடோபங்களை சுக்குநூறாக உடைத்து அன்பை உலக நெறியாக போதிக்கும் வல்லமை வேறெதையும் விட காதலுக்கு மட்டுமே உண்டு.

வேறெதையும் விட மனிதனை இயக்கும் சக்தி, மேற்கூரிய போலித்தனங்களின் கொடுங்கரங்களுக்குப் புலப்படாத மாயத்தன்மை காதலுக்கும் அன்புக்கும் மட்டுமே உண்டு.

உலகின் முதல் மனிதன் முதல் கடைசி மனிதன் வரை காதலின் விசை நிகழ்த்தும் அதிர்வுகள் உயிர்போடு கடத்தப்பட்டுக் கொண்டே இருக்கும். காதல் என்றுமே அழிவதில்லை. அதை குறிப்புணர்த்தும் விதமான இன்று காதலர் தினம் உலகமெங்கும் கொண்டாடப்படுகிறது.

காதலின் நகரமான பாரீஸ் வீதிகள் கலையம்சம் கொண்டு மிளிர்கிறது. ஐபில் கோபுரம் சாட்சியாக காதலை காதலுக்காகவே ஆன தினத்தில் கொண்டாடி வருகின்றனர். காதலர்கள் தங்களுக்குள் கிரீட்டிங் அட்டைகள், சாக்லெட்டுகள், பரிசுகளை பரிமாறி வாழ்த்து தெரிவிக்கின்றனர்.

இவை எதுவும் இல்லாமல் உலகின் ஏதோ ஒரு மூலையில் அடுத்த வேலை உணவுக்கே வழியில்லாத மனிதர்கள் வாழும் பஞ்சப் பிரதேசம் ஒன்றில் இளம் காதலி தனது மனங்கவர்ந்த காதலனின் கையைப்பற்றி முத்தமிடுகிறாள். 
 

Leave a Reply