கிழக்கே போகும் ரயில் படத்தில் காதல் அழகாக சொல்லப்பட்டிருக்கும்.
அதில் நாயகன் பரஞ்சோதி ஒரு கவிஞன். ஏழை முடித்திருத்தும் தொழிலாளிக்கு மகனாக பிறந்தாலும் படித்து கவியெழுதும் அளவுக்கான அறிவு உள்ளது. பாரதியின் தீவிர ரசிகன் அவன். அதனாலேயே 'பாஞ்சாலி'யை பிடித்துப்போகிறது.
படத்தில் பரஞ்சோதியின் காதல் ஊருக்கு தெரிந்து ஊரால் இகழப்பட்டு, தந்தையையும் இழந்து சென்னை செல்வான். தன் கவிதை திறமையை வைத்து சென்னையில் வேலை தேடுவான். இவர்கள் ரயிலின் கடைசி பெட்டியை தபாலாக உபயோகித்து செய்திகளை பாஞ்சாலியும், பரஞ்சோதியும் எழுதி அனுப்புவார்கள்.
இது வரை கதை இப்படி. இந்தப்படத்துக்கு முதலில் க்ளைமேக்ஸாக என்ன வைத்திருந்தார்கள் தெரியுமா?.
பரஞ்சோதி எழுதி அனுப்பிய கடைசிப்பெட்டி எழுத்துக்கள் மழையால் அழிந்து விடும். இது தெரியாமல் சென்னைக்கு ரயிலேறுவாள் பாஞ்சாலி. அங்கு வெயிட்டிங் ரூமில் காத்திருக்கும் பாஞ்சாலி பரஞ்சோதியை பற்றி கேட்கும் போது நான்கு பேர் அவளை அழைத்துக்கொண்டு போய் சீரழித்து விடுவார்கள். அதில் பைத்தியமாகி பாஞ்சாலி அந்த ஸ்டேஷனிலேயே 'கிழக்கே போகும் ரயில் எப்போ வரும்?" என பைத்தியமாகி அலைவதாகவும், ஒரு விபத்தில் சிக்கி பாஞ்சாலி சாலையில் விழ, அவள் மீது பரஞ்சோதி எழுதிய கவிதைகள் புத்தகங்களாக அந்த வண்டியிலிருந்து விழ படம் முடியும்.
ஷுட்டிங் கிளம்ப முதல்நாள் தயாரான போது கதாசிரியர் செல்வராஜுக்கு ஒரு ப்ரெஞ்ச் நாவலில் ஒரு ஐடியா கிடைக்கிறது. அதில் ஒரு நாட்டில் மன்னன் ஓவராக வரி விதிக்கிறான். மக்கள் மன்னனிடம் குறைக்கச்சொல்லி கேட்க "அவர்களில் ஒரு பெண் நிர்வாணமாக நாட்டை வலம் வந்தால் வரியை குறைக்கிறேன்" எனச்சொல்கிறான். யாரும் வர மாட்டார்கள் என்கிற தைரியம் மன்னனுக்கு. அதேப்போல் யாரும் வரவில்லை. மக்களின் மீது இரக்கப்பட்டு மகாராணி நிர்வாணமாக வலம் வருகிறாள். இந்தக்காட்சி செல்வராஜுக்கு ஸ்பார்க் அடிக்கிறது.
பாரதிராஜாவை முதல் நாள் ஷூட்டிங் கிளம்ப இருந்தவரை அழைக்கிறார். கதையில் சின்ன சேஞ்ச் என இப்போது உள்ள க்ளைமேக்ஸை சொல்கிறார். ஊரில் பயங்கர மழை. மழை நிற்கவேண்டுமென்றால் ஒரு பெண் தீப்பந்தத்துடன் நிர்வாணமாக வலம் வரவேண்டும் என முடிவாகி அது பாஞ்சாலி என முடிவாகிறது. அப்படியே பாஞ்சாலி நிர்வாணமாக தீப்பந்தத்துடன் வருகிறாள்.
ஒரு திரைப்படத்தில் ரசிகன் பின்னால் வரும் காட்சியை முன்னாலேயே கற்பனை செய்ய ஏதுவாக திரைக்கதையை மாற்றுவது ஒரு உத்தி தான். அது வொர்க்கவுட்டாகி படம் க்ளைமேக்ஸாலேயே பெரும் வெற்றி பெற்றது. கடவுளின் முன் எல்லோருமே ஆடையற்றவர்கள் தானே. குழந்தைகளை கடவுள் ஆடையுடனா படைக்கின்றான்?. அபத்தமானாலும் அந்தக் காட்சி தந்த எஃபெக்ட் வேறு தான். அங்கு வரும் பரஞ்சோதி அவளை காப்பாற்றி அழைத்துப்போகிறான். சுபம்.
சரி. இந்த படம் ஹிட்டாகி விட்டது. ஆனால் முதலில் செய்த திரைக்கதையில் ஒரு நல்லக்கதைப்படம் இருக்கத்தானே செய்கிறது. அதையும் படமாக எடுக்கலாமே....
எடுத்தார்கள். அந்த கதையில் கவிஞன். இந்தக்கதையில் நாடக எழுத்தாளன் மோகன். அதே வீட்டுக்கு பாஞ்சாலியைப்போல் குடி வருகிறார் அம்பிகா. இருவரும் காதலிக்கிறார்கள். இரு வீட்டிலும் எதிர்ப்பு. சம்பாதித்து பெரியாளாகி வருகிறேன் என மோகன் பட்டணத்துக்கு கிளம்புகிறார். அம்பிகா பயப்பட கோவிலில் வைத்து தாலி கட்டி விட்டு செல்கிறார் மோகன். சென்னையில் வேலை கிடைக்காமல் மோகன் தவிக்க அம்பிகாவின் அப்பா அம்பிகாவுக்கு திருமண ஏற்பாடுகளை செய்கிறார். மோகனிடமிருந்து செய்தி வராததால் அம்பிகா மோகனைத்தேடி சென்னைக்கு ரயிலில் வர மோகனுக்கு ஒரு சினிமாவுக்கு கதை ஓகே ஆகி அம்பிகாவை தேடி எதிர்புற ரயிலில் ஊருக்கு வர...க்ளைமேக்ஸ். ரயிலில் வைத்து அம்பிகாவை நான்கு பேர் சீரழிக்கிறார்கள். ரயிலிலிருந்து இறங்கிய அம்பிகா மோகன் வரும் ரயிலின் முன் தற்கொலை செய்கிறார். இதைப்பார்த்த மோகன் பைத்தியமாகி தாலியோடு அதே ரயில் நிலையத்தில் பைத்தியமாக அலைவதாக படம் முடியும்.
அங்கேயும் ரயில் இங்கேயும் ரயில். படம் "தூங்காத கண்ணின்று ஒன்று". கதை, இயக்கம் ஆர்.சுந்தர்ராஜன்.
செல்வராஜ் பாரதிராஜாவுக்கு முதலில் சொன்ன அதே கதை. பாரதிராஜாவின் அசிஸ்டண்ட் பாக்கியராஜ். பாக்கியராஜின் நண்பர் சுந்தர்ராஜன். கதை இப்படித்தான் அங்கே போனது என நீங்களாக கற்பனை செய்து கொண்டால் கம்பெனி பொறுப்பல்ல...
டிஸ்கி: 'தூங்காத கண்ணின்று ஒன்று' படு ப்ளாப். பயணங்கள் முடிவதில்லைக்கு பிறகு மோகனும், ,அந்த 7 நாட்களுக்குப்பிறகு அம்பிகாவும் நடித்தும்....
இந்த ஃப்ளாப்பிலிலிருந்து பாரதிராஜாவைக் காப்பாற்றியது அந்த ஃப்ரெஞ்ச் மகாராணி தானே...























