சட்டமா அதிபரை பாதுகாக்கும் முயற்சியில் சட்ட அதிகாரிகள்
இலங்கை
சட்டமா அதிபரை பதவியில் இருந்து நீக்கும் எந்தவொரு முயற்சிக்கும் எதிராக வாதிடுவதற்கு தயங்கப்போவதில்லை சட்டமா அதிபர் திணைக்களத்தின் சட்ட அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அண்மைக்காலமாக சட்டமா அதிபர் தொடர்பில் பரப்பப்படும் தவறான மற்றும் அவதூறான கருத்துக்கள் தொடர்பில் தமது சங்கம் ஆழ்ந்த கவலையடைவதாக சட்ட அதிகாரிகள் சங்கத்தின் பதில் செயலாளர் தஷ்ய கஜநாயக்க இது தொடர்பான அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஒரு வழக்கில் சந்தேகநபர்கள் மூவரை விடுதலை செய்வதற்கு கடந்த தினம் சட்டமா அதிபர் வழங்கிய பரிந்துரைகள் சட்டமா அதிபர் திணைக்களத்தின் மரபுக்கு அமைவாகவே மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சட்டமா அதிபர் திணைக்களத்தினால் உரிய சட்ட விடயங்களை கருத்திற்கொண்டு அதற்கான சிபாரிசுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த தீர்மானத்தில் தொழிற்சங்கம் மிகுந்த நம்பிக்கையை வெளிப்படுத்துவதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சட்டமா அதிபர் திணைக்களம் உயர் மரபுகளுக்கு அமைவாக தனது சுயாதீன தீர்ப்பை பிரயோகித்துள்ளதாகவும், சட்டமா அதிபரை பதவியில் இருந்து நீக்கும் எந்தவொரு முயற்சியையும் எதிர்க்கும் எனவும் சட்ட அதிகாரிகள் சங்கம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.





















