• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அறுவை சிகிச்சைகளை துரிதப்படுத்த விசேட நடவடிக்கை

இலங்கை

நாடளாவிய ரீதியிலுள்ள வைத்தியசாலைகளில் மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சைகளை துரிதப்படுத்துவதற்காக, கடமை நேரத்திற்குப் பின்னர் மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சைகளுக்கான, உதவி தொகையை ஜனாதிபதி நிதியிலிருந்து பணியாளர்களுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியிலுள்ள மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சைகளை துரிதப்படுத்துவதற்காக, கடமை நேரத்திற்குப் பின்னர் மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சைகளுக்கான, உதவி தொகையை ஜனாதிபதி நிதியிலிருந்து பணியாளர்களுக்கு வழங்கும் முறைமை கராபிடிய வைத்தியசாலையில் மாத்திரம் முன்னெடுக்கப்படுகின்றது.

இந்த நிலையில் எதிர்காலத்தில் அதனை கொழும்பு தேசிய வைத்தியசாலை, கண்டி வைத்தியசாலை மற்றும் ரிச்வே சீமாட்டி சிறுவர் வைத்தியசாலை என்பவற்றிலும் முன்னெடுப்பதற்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளது. நோயாளிகளுக்கு அதிக நன்மைகளை வழங்கும் வகையிலேயே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மேலும், ஜனாதிபதி நிதியத்தின் செயல்பாடுகளை கிராம மட்டத்திற்கு விரிவுபடுத்துவதற்கும் பிரதேச செயலகம் மூலம் சேவைகளை இணையவழி மூலம் வழங்குவதற்கும் ஜனாதிபதி நிதியத்தின் நிர்வாகக் குழு அங்கீகாரமும் அளித்துள்ளது.
2025 ஆம் ஆண்டுக்காக ஜனாதிபதி நிதியத்தின் நிர்வாக சபைக் கூட்டம், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நேற்று இடம்பெற்றிருந்த நிலையில் இந்த தீர்மானங்கள் எட்டப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி நிதியத்தின் நன்மைகள் உண்மையாக மக்களைச் சென்றடையும் வகையில் வினைத்திறனான சேவைகளை வழங்கும் வகையில் திட்டம் தயாரித்தல், புதிய யோசனைகள் மற்றும் தற்போதுள்ள பிரச்சினைகளைக் கண்டறிந்து அவற்றுக்கான தீர்வுகளை வழங்குவது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

அரச வைத்தியசாலைகளில் அறுவை சிகிச்சைகளுக்காக காத்திருப்போர் பட்டியலில் அதிக எண்ணிக்கையிலானோர் இருப்பதாகவும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. இக் கலந்துரையாடலில் பிரதமர் ஹரிணி அமரசூரிய, சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் ஜனாதிபதி நிதியத்தின் சிரேஷ்ட உறுப்பினர்கள் எனப்  பலரும் கலந்து கொண்டனர்.
 

Leave a Reply