தமிழனின் வரலாற்றைப் போற்றும் பூர்வீகம் விரைவில் திரையில் வெளிவர இருக்கிறது!!
பிரைன் டச் ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் டாக்டர் R முருகானந்த் தயாரிப்பில், இயக்குநர் G.கிருஷ்ணன் இயக்கத்தில், கதிர், மியாஶ்ரீ நடிப்பில், சமூக அக்கறை மிக்க படைப்பாக, ஏர் பூட்டிய தமிழனின் வரலாற்றைப் போற்றும் படைப்பாக, உருவாகியுள்ள திரைப்படம் "பூர்வீகம்". படத்தின் பணிகள் முடிந்த நிலையில், திரையரங்குகளில் வெளியிட தற்போது பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறது.
நம் இந்திய நாட்டின் முதுகெலும்பான தொழில் விவசாயம் .இரண்டு தலைமுறையாக இளைஞர்கள் தங்களின் பூர்வீகத்தை விட்டு இடம்பெயர்ந்து படிப்பிற்காகவும் தொழிலுக்காகவும் முழுமையாக இடம்பெயர்ந்து தற்பொழுது நகரத்திலேயே வாழ்ந்து வருகின்றனர் . நகரத்திற்கு இடம்பெயரும் இளைய சமுதாயம், நம் கலாச்சாரத்தையும், வாழ்வியலையும், விவசாயத்தின் மேன்மையையும், அப்படியே உதறி தள்ளிவிட்ட விவசாயத்தின் அருமையை எடுத்துச் சொல்லும் அழுத்தமான படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது.
படம் குறித்து தயாரிப்பாளர் டாக்டர் R முருகானந்த் கூறுகையில்..
இன்று தமிழ்நாட்டில் மட்டுமல்ல உலகமெங்கும் விவசாய நிலங்கள் குறைந்து கொண்டே வருகிறது... ஆனால் மக்கள் தொகை பெருகிக்கொண்டே போகிறது. இதே நிலை நீடித்தால் எதிர்காலத்தில் உணவு பஞ்சம் தலைவிரித்து ஆடும்... ஆகவே தனி மனிதனோ அரசாங்கமோ விவசாய நிலத்தை பாதுகாக்க முயற்சி செய்ய வேண்டும் மேலும்... படித்தவனோ பாமரனோ... அரசனோ ஆண்டியோ... யாராக இருந்தாலும் அவன் வாரத்தில் ஒரு நாளாவது விவசாயத்தில் ஈடுபடவேண்டும்... இப்படி ஒவ்வொருவரும் விவசாயத்தில் ஈடுபட்டால் வளம் பெருகும்.. வாழ்வும் சிறக்கும்.. இதைத்தான் பூர்வீகம் என்ற இந்தத் திரைப்படத்தில் வெகு ஆழமாக கூறியுள்ளோம் என்றார்.
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் குடும்பத்துடன் ரசிக்கும் அழகிய படைப்பாக இப்படத்தை உருவாக்கியுள்ளனர் .
இப்படத்தில் கதாநாயகனாக கதிர் நடித்துள்ளார். கதாநாயகியாக மியாஶ்ரீ நடித்துள்ளார். போஸ் வெங்கட், சங்கிலி முருகன், இளவரசு, YSD சேகர், சூசன், ஶ்ரீ ரஞ்சனி, ஷாஸ்னா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தில் மூன்று பாடல்கள் இடம்பெற்றுள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டை மிக வித்தியாசமான மண்ணின் மைந்தர்கள் விவசாயிகளை வைத்து, படக்குழுவினர் வெளியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது .
விரைவில் திரையரங்கு வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.