2025 ஆஸ்கர்ஸ் - சிறந்த திரைப்படம் பிரிவில் கங்குவா உள்பட 5 இந்திய திரைப்படங்கள்
சினிமா
97வது அகாடமி விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி இன்னும் இரண்டு மாதங்களில் நடைபெற இருக்கிறது. இதையொட்டி இந்த ஆண்டுக்கான ஆஸ்கர் விருது பெற போட்டியிட தகுதியுள்ள திரைப்படங்கள் பட்டியல் வெளியிடப்பட்டு இருக்கிறது. இந்தப் பட்டியலில் 323 திரைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. இவற்றில் 207 திரைப்படங்கள் ஏற்கனவே சிறந்த திரைப்படம் பிரிவில் இடம்பெற தகுதி பெற்றுவிட்டன.
207 திரைப்படங்களில் ஐந்து இந்திய திரைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. அதில் கங்குவா (தமிழ்), ஆடு ஜீவிதம் - தி கோட் லைஃப் (இந்தி), சந்தோஷ் (இந்தி), ஸ்வாதந்த்ரியா வீர் சாவர்கர் (இந்தி) மற்றும் ஆல் வி இமாஜின் அஸ் லைட் (மலையாளம்-இந்தி) ஆகியவை அடங்கும்.
இந்த திரைப்படங்களை தேர்வு செய்வதற்கான வாக்குப்பதிவு நாளை (ஜனவரி 8) துவங்கி ஜனவரி 12 ஆம் தேதி வரை நடைபெறும். இதன்பிறகு, ஜனவரி 17 ஆம் தேதி இறுதிப் பட்டியலில் தேர்வான திரைப்படங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.
இறுதிப்பட்டியலில் எத்தனை இந்திய திரைப்படங்கள் இடம்பெறும் என்பதை அறிந்து கொள்ள ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர். இந்த ஆண்டு ஆஸ்கர் விருது வழங்கும் விழா மார்ச் 2 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த விழா ஒவேஷன் ஹாலிவுட்டில் உள்ள டால்பி தியேட்டரில் நடைபெறவுள்ளது.