நான் சட்டத்தை மதிப்பவன்... எனது பெயரை கெடுக்க சதி- தெலுங்கானா முதல்-மந்திரிக்கு அல்லு அர்ஜூன் பதில்
சினிமா
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் சந்தியா தியேட்டரில் புஷ்பா-2 படம் பார்க்க சென்ற பெண் ஒருவர் கூட்டத்தில் சிக்கி பலியானார். அவருடைய மகன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவத்தில் நடிகர் அல்லு அர்ஜூன் கைது செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் நேற்று தெலுங்கானா சட்டசபையில் பரபரப்பாக பேசப்பட்டது. இதுகுறித்து முதல்- மந்திரி ரேவந்த் ரெட்டி கூறுகையில்:-
அல்லு அர்ஜூன் போலீசார் எச்சரித்தும் கேட்காமல் சென்றார். தியேட்டரில் ரோடு ஷோ நடத்தியதால் தான் நெரிசலில் சிக்கி பெண் இறந்தார் . அதற்கு பிறகும், நடிகர் திரையரங்கத்தை விட்டு வெளியே வரவில்லை, காவல்துறை அவரை வலுக்கட்டாயமாக வெளியேற்றியதாக குற்றம் சாட்டினார். இதற்கு நடிகர் அல்லு அர்ஜூன் மறுப்பு தெரிவித்தார்.
இது தொடர்பாக அல்லு அர்ஜூன் கூறியதாவது:-
சந்தியா தியேட்டரில் நடந்தது துரதிர்ஷ்டவசமானது. அது ஒரு விபத்து மற்றும் யாரும் தவறு செய்யவில்லை. உயிர் இழப்புக்கு ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். யாருக்கும் தீங்கு செய்ய நினைக்கவில்லை.
நான் யாரையும், அரசாங்கத்தையோ அல்லது அதிகாரிகளையோ குறை கூறவில்லை. ஊகங்கள் மற்றும் தவறான தகவல்களைத் தவிர்ப்பதற்காக தான் இதுவரை அமைதியாக இருந்தேன்.
தியேட்டருக்கு சென்றபோது "நான் காவல்துறையின் அனைத்து அறிவுறுத்தல்களையும் பின்பற்றினேன், அனுமதியின்றி எங்கும் செல்லவில்லை,"
போலீசார் பாதுகாப்புடன் செல்கிறேன் என்ற உணர்வுடன் நானும் காரில் சென்றேன். அதிகளவில் ரசிகர்கள் இருந்ததால் போலீசாரும் அங்கிருந்த பவுன்சர்களும் ஒருமுறை வெளியே வந்து நீங்கள் ரசிகர்களுக்கு முகத்தை காண்பித்து கையசைத்தால் அவர்கள் சென்று விடுவார்கள் என கூறினர்.
அதனால் தான் தியேட்டருக்கு மிக அருகில் கார் செல்லும் போது நான் காரில் இருந்து ரூப் டாப்பில் இருந்து வெளியே வந்து ரசிகர்களுக்கு அன்பை வெளிப்படுத்தும் விதமாக கைகளை உயர்த்தி அவர்களின் வரவேற்பை ஏற்றேன். போலீசார் வழியை ஏற்பாடு செய்த பிறகு நான் தியேட்டருக்குள் சென்றேன்.
சினிமா தொடங்கிய சில மணி நேரத்திற்கு பிறகு வெளியே கூட்டம் அதிகமாக இருக்கிறது. போலீசார் கூட்டத்தை கட்டுப்படுத்த சிரமம் ஏற்படுவதாகவும், எனவே நீங்கள் செல்ல வேண்டும் என எனது பாதுகாப்பு ஊழியர்கள் தெரிவித்தனர். எனவே அங்கிருந்து நான் எனது மனைவி குழந்தைகளுடன் சென்றுவிட்டேன்.
அப்போதும் போலீசார் நான் செல்வதற்கு வழியை ஏற்பாடு செய்தனர். இந்த இடைவெளியில் ஒரு ரசிகை இறந்ததும் அவரது மகன் கோமா நிலைக்கு சென்றதும் எனக்கு மறுநாள் காலை தான் தெரியவந்தது.
இந்த தகவலை அறிந்து மிகவும் கவலை அடைந்தேன். ஆனால் எனது தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்கும் விதமாக கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. நான் ஒரு குறிப்பிட்ட வழியில் நடந்து கொண்டதாக நிறைய தவறான தகவல்கள் உள்ளன. இவை தவறான குற்றச்சாட்டுகள். இது அவமானகரமானது. எனது குணநலன் படுகொலை. என்னைப்பற்றி நிறைய தவறான தகவல்கள், நிறைய பொய்யான குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன. என் பெயரை கெடுக்க சதி நடக்கிறது.
நான் சட்டத்தை மதிப்பவன் எனக்கு அரசு அனுமதி வழங்கினால் இப்போது கூட நான் பாதிக்கப்பட்ட குடும்பத்தை சென்று சந்திக்க தயாராக இருக்கிறேன். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் சிறுவன் உடல் நிலை குறித்து 1 மணி நேரத்துக்கு ஒருமுறை கேட்டு வருகிறேன். சிறுவன் குணமடைய அனைத்து உதவிகளையும் செய்வேன்.
இவ்வாறு அவர் கூறினார்.