• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நோர்வே தூதுவருடன் பிரதமர் ஹரிணி அமரசூரிய சந்திப்பு

இலங்கை

இலங்கைக்கான நோர்வேயின் தூதுவர் ஹெச்.இ.மே-எலின் ஸ்டெனர் (H.E.May-Elin Stener) உடன் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய சந்திப்பினை மேற்கொண்டுள்ளார்.

இந்த சந்திப்பானது நேற்றைய தினம் கொழும்பில் அமைந்துள்ள பிரதமர் அலுவலகத்தில் மரியாதை நிமித்தம் இடம்பெற்றுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

சந்திப்பின் போது, வறுமை ஒழிப்பு, சமூகப் பாதுகாப்பு நடவடிக்கைகள், வரிச் சீர்திருத்தங்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கம் உள்ளிட்ட முக்கிய விடயங்களுடன் இரு நாடுகளுக்கும் இடையே கூட்டுப் பங்காளித்துவ மேம்பாடு தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.

இதன்போது பிரதமர் கலாநிதி அமரசூரிய, இலங்கையின் கல்வி முறையை மாற்றியமைப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியதுடன், மேம்பட்ட பொதுச் சேவை வழங்கலுக்காக ஆட்சியை டிஜிட்டல் மயமாக்குவதற்கான தொடர்ச்சியான முயற்சிகளை எடுத்துரைத்தார்.

பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, பிரதமரின் மேலதிக செயலாளர் திருமதி.சகரிகா போகஹவத்த மற்றும் பணிப்பாளர் நாயகம் திருமதி ஷோபினி குணசேகர உட்பட நோர்வே தூதரகம் மற்றும் இலங்கை அரசாங்கத்தின் உயர் அதிகாரிகள் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.
 

Leave a Reply