இனவாத அரசியலுக்கு இனி இடமில்லை – ஜனாதிபதி
இலங்கை
இனவாத அரசியலுக்கு இனி நாட்டில் இடமளிக்கப்போவதில்லை. தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்த, வாக்களிக்காத அனைவரும் நாட்டின் பிரஜைகள். இந்த அனைத்து பிரஜைகளின் தேவைகளையும் எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றுவது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
நீண்டகாலமாக மக்களின் அபிலாஷையாக இருந்த தேசிய ஐக்கியத்தை நாட்டில் கட்டியெழுப்புவதற்கான பாரிய சந்தர்ப்பம் தற்போது உருவாகியுள்ளது.
நாட்டு மக்களுடனான உறவுகளை பாதிக்க தானும் அரசாங்கமும் இடமளிக்க மாட்டோம்.
இந்த ஆட்சியை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு தாங்கள் கட்டுப்பட்டு அர்ப்பணிப்புடன் உள்ளோம் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
10 ஆவது நாடாளுமன்றின் முதல் அமர்வின் போதான தனது கொள்கைப் பிரகடன உரையின் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.
சர்வதேச நாணய நிதியத்தின் நீட்டிக்கப்பட்ட கடன் வசதி தொடர்பான மூன்றாவது மீளாய்வுக்கான பணியாளர் மட்ட ஒப்பந்தம் எதிர்வரும் 23 ஆம் திகதி கைச்சாத்திடப்பட உள்ளது.
வறுமையை ஒழிப்பதற்கான முதல் படியாக ‘அஸ்வெசும’ நலன்புரி உதவித்தொகை கொடுப்பனவுகளுக்காக ஒதுக்கப்பட்ட தொகையை ஆதரிக்கின்றோம்.
மேலும், எதிர்வரும் வரவு செலவு திட்ட பிரேரணையில் அனைத்து அரச ஊழியர்களுக்கும் நியாயமான சம்பள அதிகரிப்பு வழங்கப்படும் என்றும், ஒக்டோபர் மாதம் முதல் அனைத்து ஓய்வூதியர்களின் கொடுப்பனவுகளிலும் ரூ.3,000 சேர்க்கப்பட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் நாடாளுமன்றில் முன்மொழியப்படும் என்றும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.