மன்னாரில் இராணுவ வீரர்கள் 25 பேர் வைத்தியசாலையில் அனுமதி
இலங்கை
மன்னார் பெரியமடு பகுதியில் இராணுவ பயிற்சி முகாமொன்றைச் சேர்ந்த 25 இராணுவ வீரர்கள் காய்ச்சல் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மன்னார்-யாழ் பிரதான வீதி பெரியமடு கொமான்டோ இராணுவ பயிற்சி முகாமில் 500 இற்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் நேற்று முதல் தனிமைபடுத்தப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
குறித்த பயிற்சி முகாமில் பயிற்சி நடவடிக்கையில் ஈடுபட்ட இராணுவ சிப்பாய்கள் சிலர் திடீர் சுகயீனம் அடைந்துள்ளனர். இதனையடுத்து அவர்கள் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதன் போது இவர்களுக்கு முன்னெடுக்கப்பட்ட மருத்துவ பரிசோதனையின் போது மூளைக் காய்ச்சல் ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டது. இதனையடுத்து இராணுவ வீரர்கள் 25 பேர் வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.
இவர்களில் ஒருவர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் அவர் அங்கொடை தேசிய தொற்றுநோய்தடுப்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. எனினும் தற்போது காய்ச்சல் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
எவ்வாறாயினும் குறித்த பயிற்சி முகாமில் பயிற்சி நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டு அங்கிருந்த 500 இற்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.