• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வன்முறையை விரும்பாத ஜனநாயகவாதி.. டிரம்ப்பை சுட்டதாக கைது செய்யப்பட்டுள்ள ரயான்

அமெரிக்காவில் வரும் நவம்பர் 5 நடக்க உள்ள அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடும் முன்னால் அதிபர் டிரம்ப் மீது அடுத்தடுத்து துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடந்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூலை 12 ஆம் தேதி பென்சில்வேனியா பிரச்சார கூட்டத்தில் டிரம்ப் மீது நடந்த துப்பாக்கிச்சூட்டில் அவரது காதில் குண்டு உரசிச் சென்றதால் நூலிழையில் உயிர் தப்பினார். இந்த துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட மேத்யூ க்ரூக்ஸ் என்ற 20 வயது இளைஞன் கைது செய்யப்பட்டான். இந்நிலையில் நேற்று [ஞாயிற்றுக்கிழமை] புளோரிடா மாகாணத்தில் தனக்குச் சொந்தமான கோல்ப் மைதானத்தில் அவர் விளையாடிக் கொண்டிருந்தபோது அருகில் துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டுள்ளது.

ஏகே 47 ஸ்டைல் ரைபிள்

டிரம்ப்பை குறித்து வைத்தே அந்த துப்பாக்கிச்சூடு நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதில் டிரம்புக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று அவரது தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சம்பவ இடத்தில் இருந்து தூரத்தில் உள்ள இலக்கை குறி வைப்பதற்காக பயன்படுத்தப்படும் ஸ்கோப் பொருத்தப்பட்ட ஏகே 47 ஸ்டைல் ரைபிள் துப்பாக்கியையும் GoPro கேமரவையும் சீக்ரெட் சர்வீஸ் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

உக்ரைனை ஆதரிக்கும் ஜனநாயகவாதி

இதைத்தொடர்ந்து துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் நபர் ஏறி தப்பிய கருப்பு நிற காரை டிராக் செய்து அவரை கைது செய்துள்ளனர். 58 வயதான ரயான் வெஸ்லி ரூத் [Ryan Wesley Routh] என்பவரே அந்த நபர். இவர்தான் துப்பாக்கிச்சூடு நடத்தினார் என்பதற்கு வலுவான ஆதரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. ரயான் வெஸ்லி ரூத் ஆட்சியில் உள்ள ஜனநாயக கட்சியின் ஆதரவாளர் என்பதும் 2022 ஆம் ஆண்டு ரஷியா தொடுத்துள்ள போரில் உக்ரைனுக்கு ஆதரவாக தொடர்ந்து கருத்துக்களை பொதுவெளியில் வெளிப்படுத்தி வந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது.

தொழில்முறையாக கட்டட தொழிலாளியான ரூத், உக்ரைனுக்கு சென்று ஆயுதம் ஏந்தி ரஷியாவுக்கு எதிராக போராட அதிக ஆர்வமாக இருந்துள்ளார். உக்ரைனுக்காக ஆயுதமேந்தி சாகவும் தான் தயார் என்று கூறி வந்துள்ளார். அமரிக்க அரசியலை கூர்மையாக கவனித்து தனது கருத்துக்களை எக்ஸ் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தொடர்ந்து பதிவு செய்பவராக ரூத் இருந்துள்ளார். சுதந்திரம், ஜனாயநாயகம் மற்றும் மனித உரிமைகளுக்கு மக்கள் ஒவ்வொருவரும் தங்களின் பங்கை, அது சிரியாயதாக இருந்தாலும் செய்தாக வேண்டும் என்ற கருத்து கொண்ட ரூத், டிரம்ப்பின் கொள்கைகள் இவை அனைத்துக்கும் எதிரானவை என்று கருதியுள்ளார். தன்னை பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்தபோது எந்த ஆரவாரமும் ஆச்சரியமும் இல்லாமல் சர்வ சாதாரணமாக அவர்களுடன் சென்றுள்ளார்.

வன்முறையை விரும்பாத உழைப்பாளி

கடந்த 2002 ஆம் ஆண்டு கையில் ஆட்டோமேட்டிக் துப்பாக்கியுடன் கிரீன்ஸ்போரோ நகரில் உள்ள கட்டடத்தில் தடுப்பை உடைத்து அத்துமீறி புகுந்ததற்காக ரூத் கைது செய்யப்பட்டுள்ளார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. தற்போதைய தேர்தலில் விவேக் ராமசாமி, நிக்கி ஹாலி உள்ளிட்ட வேட்பாளர்களுக்கு ஆதரவாக இருந்த ரூத்,அவர்கள் தேர்தலில் இருந்து பின்வாங்கியதை கண்டித்திருந்தார்.

இந்நிலையில் தனது தந்தை வன்முறையை விரும்பும் ஆள் கிடையாது என்று ரூத்தின் மகன் ஊடகத்திடம் தெரிவித்துள்ளார். தனது தந்தை துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டால் என்பதை தன்னால் நம்பமுடியவில்லை என்று தெரிவித்த அவரது மகன், அவர் கடின உழைப்பாளியும் சிறந்த மனிதனும் ஆவார் என்று தெரிவித்தார். மேலும் தனது வாழ்நாள் முழுவதும் அவர் உழைத்தார் [has worked his whole f***ing life] என்றும் அவரது மகன் கூறுகிறார்.

Leave a Reply