• Welcome to TamilsGuide
செய்திகள் 1

JVP மற்றும் TMVPயைத் தடைசெய்ய வேண்டும்

இலங்கை

”பிள்ளையானுடைய தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியையும் (TMVP )அநுரவின் ஜே.வி.பியையும் ( JVP) தேர்தல் ஆணையாளர் உடனடியாகத்  தடைசெய்ய வேண்டும்” என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

மட்டக்களப்பில் இன்று(30) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ” மட்டக்களப்பு மாவட்டத்துக்கு அண்மையில் விஜயம் செய்த ஜே.வி.பி கட்சியியின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடவுள்ள அநுர குமார திஸநாயக்க, இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் மக்களை அச்சுறுத்தி அரசியல் செய்து வருவதாகக்  குற்றம் சாட்டியிருந்தார்.

குறித்த கருத்துக்கு பதிலடி கொடுக்கும் விதமான  ”தங்களுக்கு ஆயுதங்கள் வழங்கியது ஜே.வி.பி. யினர் எனவும் மக்களை கொலை செய்வதற்காக திருப்பி கேட்டபோது அதனை தாம் வழங்கவில்லை  எனவும் பிள்ளையான் ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார்.

இதன்மூலம்  இந்த இரண்டு தரப்பினரும்  ஆயுத பரிமாற்றத்தில் ஈடுபட்டுள்ளமை அப்பட்டமாகத் தெரிகின்றது.  கடந்த யுத்த காலங்களில் தென்பகுதியில் இந்த ஆயுதங்களைப்  பயன்படுத்தி அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.அதேபோல வடக்கு கிழக்கிலும் அப்பாவி மக்கள் புத்திஜீவிகள், படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் இரவீந்தரநாத், ஜோசெப் பரராஜசிங்கம், மனித நேய பணியாளர்கள் என  17 பேர் படுகொலை செய்யப்பட்டமை, மற்றும்  சிறுவர்கள் பலர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் பிள்ளையான் மீது உள்ளன.

இந்நிலையில் தற்போது இந்த ஆயுத பரிமாற்றம் இடம்பெற்றுள்ளது என்பதை ஒத்துக் கொண்டுள்ளமையால் இந்த படுகொலைகளை இந்த இரு கட்சிகளையும் சேர்ந்தவர்களே செய்துள்ளனர் என வெளிப்படையாகத் தெரிகின்றது.

ஒரு ஜனநாயகக் கட்சியாக இருக்கின்றவர்கள் இப்படிபட்ட சட்டவிரோத ஆயுத பரிமாற்றத்தில் ஈடுபடமுடியாது. இது சர்வதேச சட்டத்துக்கு முரணான விடயம். ஆகவே இரு கட்சிகளையும் உடனடியாக தேர்தல் ஆணையாளர் தடை செய்ய வேண்டும். அத்துடன் இரு கட்சிகளையும்  உடனடியாக விசாரணைக்கு உட்படுத்தபடவேண்டும்.

சர்வதேச மட்டத்தில் இவர்களுடைய அமைப்புக்களைத் தடை செய்வதோடு, இவர்களது அலுவலகங்கள் சோதனையிடவேண்டும்.

அத்துடன் பயங்கரவாத பட்டியலில் சேர்க்க வேண்டும்” இவ்வாறு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்துள்ளார்.
 

Leave a Reply